M K Stalin
“கல்வி வளர்ச்சி நாளாக அறிவித்து உவகை கொண்டது தி.மு.க” : காமராஜர் மணிமண்டபத்திற்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்தநாளில், அவர் பிறந்த மண்ணில் திரு.சரத்குமார் அவர்களின் முயற்சியில் அமைக்கப்பட்டுள்ள ’காமராஜர் மணிமண்டபம்’ திறப்புவிழாவிற்கு கழக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார். அந்த வாழ்த்து செய்தியில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது :
“கல்விக்கண் திறந்த பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்த நாளில் நடைபெறும் மணிமண்டபம் திறப்பு விழாவிற்கு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மனம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பெருந்தலைவர் பிறந்த மண்ணில் அமைக்கப்பட்டுள்ள இந்த மணிமண்டபம் - இடையறாமல் அவர் ஆற்றிய பொதுப் பணிகளுக்கும், நாட்டின் நலனுக்கும் முன்னேற்றத்திற்கும் ஆற்றிய தொண்டறத்திற்கும், பொதுமக்களின் உற்ற, நெருக்கமான, நயத்தகு நண்பராக, வழிகாட்டியாக, முதலமைச்சர் பொறுப்பிலிருந்து தொடர்ந்து செய்த தன்னலமற்ற சேவைகளுக்கும், நன்றி பாராட்டுவதாக அமையும் என்பதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன். இந்த சீரிய முயற்சியைத் துவங்கி - வெற்றியடைந்துள்ள சகோதரர் திரு. சரத்குமார் அவர்களுக்கு எனது பாராட்டுதலையும், போற்றுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
முதன்முதலாக பெருந்தலைவர் அவர்களுக்கு சிலை அமைத்த பெருமை, திராவிட முன்னேற்றக் கழகம் பொறுப்பிலிருந்த சென்னை மாநகராட்சிக்கு உண்டு. பேரறிஞர் அண்ணா அவர்கள் தமிழ்நாடு முதல்வராக இருந்த போது நடைபெற்ற இரண்டாவது உலகத்தமிழ் மாநாட்டில் வரவேற்புரை நிகழ்த்தி, அந்தமாநாட்டைத் தொடங்கி வைத்தவர் பெருந்தலைவர் காமராஜர் அவர்கள். குமரிக் கடற்கரையில், திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில், தலைவர் கலைஞர் அவர்கள், கர்மவீரர் காமராஜருக்கு ஏற்றமிகு மணி மண்டபத்தை எழுப்பியிருக்கிறார். சென்னை கடற்கரை சாலை, மீனம்பாக்கம் உள்நாட்டு விமான நிலையம் ஆகியவற்றுக்கு, பெருந்தலைவரின் பெயர் சூட்டி மகிழ்ந்தது திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி.
இதே விருதுநகரில் காமராஜர் பிறந்த இல்லத்தை நினைவகம் ஆக்கியதும், தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்திற்கு காமராஜர் அவர்களின் தாயார் பெயர் நினைவில் நிலைத்திருக்கும் வகையில், “அன்னை சிவகாமி அம்மையார் வளாகம்" என்று பெயர் சூட்டியதும் தலைவர் கலைஞர் அவர்கள் ஆவார்கள். கழக அரசின் “பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டதிற்கு" சிவகாமி அம்மையார் அவர்களின் பெயரை வைத்து, அத்திட்டத்தைச் சிறப்பாக நடைமுறைப்படுத்தினார் கலைஞர்.
அனைத்திற்கும் முத்தாய்ப்பு வைத்தாற்போல் 2006 சட்டமன்றத் தேர்தலின் போது, திராவிட முன்னேற்றக் கழகம் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், “காமராஜர் பிறந்த ஜூலை 15ஆம் தேதியைக் கல்விக் கண் திறந்த நாளாக அறிவித்து பள்ளிகளில் விழா எடுப்போம்" என வாக்குறுதி அளித்து - அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் ஜூலைத் திங்கள் 15ஆம் நாளைக் ‘கல்வி வளர்ச்சி நாள்’ என அறிவித்து, கழக ஆட்சியில் 24.5.2006 அன்று அரசு ஆணை வெளியிடப்பட்டது. அந்தக் கல்வி நாள், எதிர்காலத்தில் மாற்றப்பட்டு விடக்கூடாது என்பதற்காக, அந்த அரசு ஆணையை, சட்டமாகவே நிறைவேற்றியவர் தலைவர் கலைஞர் அவர்கள் என்பதை இந்த நேரத்தில் நினைவு கூர்ந்திடக் கடமைப்பட்டுள்ளேன்.
“அனைவரும் கல்வி கற்க வேண்டும்" என்ற பெருந்தலைவரின் உன்னத நோக்கத்தை நிறைவேற்றும் வகையில், முதல் கல்வி வளர்ச்சி நாளான 15.7.2006 அன்று தமிழ்நாடு முழுவதும் பள்ளிகளில் காமராஜர் அவர்களின் திருவுருவப் படம் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, மாணவ, மாணவிகளுக்கு, பேச்சு, கட்டுரை ஓவியப் போட்டிகளும், கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டு- அந்த விழாவில், 2 வயது முதல் 15 வயது வரை உள்ள குழந்தைகளுக்கும், பள்ளி மாணவ, மாணவிகளுக்கும் சத்துணவுடன் வாரம் இரண்டு முறை முட்டை வழங்கும் திட்டம் கழக ஆட்சியில் அறிவிக்கப்பட்டது.
இரண்டாவது ஆண்டுக் கல்வி நாளான 15.7.2007 அன்று “சத்துணவுடன் வாரம் மூன்று முறை முட்டை வழங்கும் திட்டமும்", 3வது ஆண்டுக் கல்வி நாளான 15.7.2008 அன்று “முட்டை சாப்பிடாத குழந்தைகளுக்குச் சத்துணவுடன் வாரம் மூன்று முறை வாழைப்பழம் வழங்கும் திட்டமும்" அறிமுகப்படுத்தப்பட்டது. ஆகவே பள்ளி மாணவர்களுக்கு உண்மையான ஊட்டச்சத்து வழங்கும் திட்டங்களை எல்லாம் செயல்படுத்தி, கல்விக் கண் திறந்த பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் புகழுக்கு மேலும் புகழையும் பெருமையையும் சேர்க்கும் அடுக்கடுக்கான காரியங்களை தலைவர் கலைஞர் அவர்கள் மிகுந்த களிப்புடன் நிறைவேற்றினார்.
விருதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த மணி மண்டபம் - பெருந்தலைவர் அவர்களின் பொது வாழ்வில் தூய்மை, அரசியலில் நேர்மை ஆகிய நற்பண்புகளையும், தமிழகத்திற்கும், இந்திய முன்னேற்றத்திற்கும் அவர் ஆற்றிய பணிகளையும் - அடுக்கடுக்கான சாதனைகளையும் இளைய தலைமுறையினருக்கு எந்நாளும் நினைவூட்டும் நேர்த்தியான அடையாளமாக விளங்கிடும் என்று இந்த நல்ல நேரத்தில் உவகை கொள்கிறேன்; வாழ்த்துகிறேன்!” என அந்த வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!