M K Stalin
வெற்றிப் பயணம் தொடரட்டும்; உரிமைப் போர்க்குரல் உயரட்டும் - மு.க.ஸ்டாலின் மடல்!
வெற்றிப் பயணம் தொடரட்டும், உரிமைப் போர்க்குரல் படரட்டும், நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞர் அவர்களின் அன்பு உடன்பிறப்புகளுக்கு, உங்களில் ஒருவன் எழுதும் கடிதம் எனக் குறிப்பிட்டு தி.மு.க தலைவர் ஸ்டாலின் மடல் எழுதியுள்ளார்.
அவர் எழுதியுள்ள மடலில், '' டெல்லிக்குச் சென்று, என்ன செய்யப்போகிறார்கள் தி.மு.க. கூட்டணி எம்.பி.க்கள் என்று எதுவுமே செய்ய இயலாதவர்கள் நம்மை நோக்கி கேள்வி கேட்டார்கள். இதுவும் செய்வோம், இன்னமும் செய்வோம், இனம்-மொழி நலன் காக்க, எதுவும் செய்வோம், அதற்காக எமது உடல் பொருள் உயிர் அனைத்தையும் ஈவோம் என்பதை, தங்களின் ஒவ்வொரு நாள் உயிரோட்டமான நடவடிக்கையிலும் மாற்றார் முகாமும் மலைத்திடும் வகையில், சாதித்துக் காட்டி வருகிறார்கள் நமது மக்களவை உறுப்பினர்கள். எதையும் தாங்கும் இதயம் கொண்ட பேரறிஞர் அண்ணா அவர்களால் உருவாக்கப்பட்ட இலட்சிய இயக்கம் இது.
அந்த இதயத்தை இரவலாகப் பெற்று, அரை நூற்றாண்டு காலம் தமிழ்நாட்டின் அரசியலைத் தீர்மானிக்கும் அரிய சக்தியாக விளங்கி-இந்திய அரசியலின் வழிகட்டும் ஒளி விளக்காகத் திகழ்ந்த, தலைவர் கலைஞர் அவர்களால், ஒரு தாயின் அக்கறையுடன், வளர்த்தெடுக்கப்பட்ட கொள்கைக் கோட்டம் இது. அவரால்,பாசமழை பொழிந்து, வார்த்தெடுக்கப்பட்டவர்கள்தான் நாம்.
அதனால்தான், நம்முடைய கழகத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மொத்த அவையின் எண்ணிக்கையில் மிகச் சிறிய அளவில் இருந்தாலும், கடுகு சிறுத்தாலும் காரம் சிறுக்காது என்பதற்கொப்ப, தமிழ்நாட்டின் தீரம் மிகுந்த குரலாக-ஜனநாயகத்தின் பாதுகாப்புக் குரலாக-அரசமைப்புச் சட்டத்தின் அரணாகச் செயல்பட்டு, நன்னம்பிக்கை ஒளியை நாட்டில் பாய்ச்சியிருக்கிறார்கள்.
மக்களவைத் தேர்தலில் முழுக்க முழுக்கத் தமிழகத்திற்குப் பயன் தரும் வெற்றியைத் தி.மு.கழகம் பெற்றிருக்கிறது. அதுபோல, மாநிலங்களவைத் தேர்தலிலும் நம்முடைய எண்ணிக்கையை உயர்த்தியிருக்கிறோம். தமிழ்நாட்டின் சார்பில் காலியான 6 மாநிலங்களவை இடங்களில் 3 இடங்கள் தி.மு.கழகத்திற்குக் கிடைத்திருக்கிறது.
அதில் ஒன்றில், மக்களவைத் தேர்தல் நேரத்தில் செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளரும் தலைவர் கலைஞர் அவர்களால் ஏற்கனவே மூன்று முறை மாநிலங்களவைக்கு அனுப்பி வைக்கப்பட்டவருமான அண்ணன் வைகோ அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். திராவிட இனத்தின் செழுமை மிகுந்த குரலாக-தமிழ்நாட்டின் உரிமைகளைப் பாதுகாத்திடவும், பறிபோகும் வாய்ப்புகளைப் பாய்ந்து தடுத்திடவும், அவரது சங்கொலி டெல்லிப் பட்டினத்தில் எதிரொலிக்க இருக்கிறது.
கழகத் தொழிற்சங்கமான தொ.மு.ச.வின் செயலாளரும், உழைக்கும் வர்க்கத்தின் நெடிதுயர்ந்த தோழரும், தலைவர் கலைஞர் அவர்களின் அன்பையும் நம்பிக்கையையும் பெற்றவருமான சண்முகம் அவர்கள் கழகத்தின் சார்பில் மாநிலங்களவைக்குத் தேர்வு பெற்றுள்ளார்.
அவரைப்போலவே, தலைவர் கலைஞர் அவர்களுன் இதயத்தில் தனிச் சிறப்பான இடம் பெற்றவரும்; ஓய்வறியாத் தலைவர் கலைஞர் அவர்கள், நிரந்தர ஓய்வு கொள்ள அவர் விரும்பிய வங்கக் கடற்கரையில், எதையும் தாங்கும் இதயமாம் அண்ணா அவர்களின் நினைவிடம் அருகே, இடம் கிடைத்திட சட்டப் போராட்டம் நடத்தி மாபெரும் வெற்றிகண்டு, நம் துன்பக் கண்ணீரை ஒரு கணத்தில் இன்பக் கண்ணீராக மாற்றியவருமான மூத்த வழக்கறிஞர் வில்சன் அவர்கள் மாநிலங்களவைக்குத் தேர்வு பெற்றிருக்கிறார். மாநிலங்களவைக்குப் புதிதாகத் தேர்வாகியுள்ள வெற்றித்திருமகன்கள் மூவரும் நாடாளுமன்ற-மாநிலங்களவையில், நமது தமிழ்மக்களின் குரலை ஓங்கி ஒலிக்க இருக்கிறார்கள்.
மக்கள் நம்மீது வைத்த மாபெரும் நம்பிக்கையை நிறைவேற்றும் வகையில், கழகத்தின் மக்களவை-மாநிலங்களவை உறுப்பினர்களின் சீர்மிகு செயல்பாடு ஒவ்வொரு நாளும் தொடர்கிறது. பதவியேற்பின்போதே நாடாளுமன்றத்தில் தமிழ் வாழ்க.. பெரியார் வாழ்க.. திராவிடம் வாழ்க.. அம்பேத்கர் வாழ்க....தலைவர் கலைஞர் வாழ்க.. என முழங்கியவர்கள் நம்மவர்கள். வாழ்த்து முழக்கங்கள் மட்டுமல்ல, தமிழ்நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் உரிமைப் போர் முழக்கமாக ஒவ்வொரு விவாதத்திலும் உயரிய கருத்துகளை எடுத்துரைக்கிறார்கள்.
நீட் தேர்வு எனும் கத்தி மாணவர்களின் மருத்துவக் கனவை அறுத்துச் சிதைப்பதைத் தடுத்திடும் வகையில் தமிழ்நாடு சட்டமன்றத்தில் அனைத்துக் கட்சிகளும் இணைந்து நின்று நிறைவேற்றிய தீர்மானத்தை குடியரசுத் தலைவர் நிராகரித்ததையே இத்தனை ஆண்டு காலம் மறைத்து வைத்த துரோகத்தை மக்களவையில் கழக உறுப்பினர் நண்பர் டி.ஆர்.பாலு அவர்கள் எடுத்துரைத்து, “ஒரு மாநில அரசின் தீர்மானத்தை நிராகரிப்பது என்பது கூட்டாட்சி முறைக்கு எதிரானது” என்பதை அழுத்தந்திருத்தமாக எடுத்துச் சொல்லி வாதாடினார். மாநிலத்தில் கழகம் ஆட்சியில் இல்லை.
ஆட்சியில் இருப்பவர்களோ மத்திய அரசின் பல்லக்கைச் சதா காலமும் தங்கள் தலையிலும் தோளிலும் சுமக்கிறார்கள். ஆனாலும், மாநில உரிமைகள் குறித்து இந்திய நாடாளுமன்றத்தில் உரக்கக் குரல் கொடுக்கும் மகத்தான இயக்கமாக நமது தி.மு.கழகம் இருக்கிறது. ரயில்வே துறையை தனியார்மயமாக்கிடவும் இந்தி மயமாக்கிடவும் துடிக்கும் மத்திய பா.ஜ.க. அரசின் செயல்பாடுகளைத் தடுத்திடும் நடவடிக்கைகளைக் கழகம் தொடர்ந்து மேற்கொண்டு வரும் நிலையில், தென்னக ரயில்வேயில் தமிழ்நாட்டின் திட்டங்கள் மீது போதிய கவனம் செலுத்தவில்லை என மக்களவையில் அன்புத் தங்கை கனிமொழி எடுத்து வைத்த வாதங்கள், எளிய மக்களின் குரலை எதிரொலிக்கும் வகையில் இருந்தன.
அரசியல் சாசனத்திற்கு விரோதமானதும், சமூக நீதித் தத்துவத்தைப் படுகுழியில் தள்ளுவதுமான பொருளாதாரரீதியான இடஒதுக்கீட்டினால் ஏற்படும் பாதிப்புகளை மக்களவையில் நீண்ட வரலாற்றுப் பின்னணியுடனும், நூற்றாண்டுகாலத் தரவுகளுடனும் அடுக்கி வைத்த சகோதரர் ஆ இராசா அவர்களின் வாதம், ஒட்டுமொத்த நாடாளுமன்ற உறுப்பினர்களையும் சிந்திக்க வைக்கும் வகையில் அமைந்தது.
அவையில் குரல் கொடுப்பதுடன் கழக உறுப்பினர்களின் பணி முடிந்து விடுவதில்லை. அதன் மீதான தொடர் நடவடிக்கைகளை நாள்தோறும் மேற்கொண்டு வருகிறார்கள்.
இந்தித் திணிப்பை நேரடியாகவும் மறைமுகமாகவும் பலவகைகளில் மேற்கொண்டு வரும் மத்திய பா.ஜ.க. அரசு, அஞ்சல் துறையில் மாநில மொழிகளில் தேர்வெழுதும் வாய்ப்பைப் பறித்து, இந்தி-ஆங்கிலம் ஆகிய மொழியகளில் மட்டுமே இனி தேர்வெழுத முடியும் என அறிவித்துள்ளது. இது குறித்து, மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சரை நேரில் சந்தித்த கழக மக்களவை உறுப்பினர், அடுக்கடுக்கான வாதங்களை அஞ்சாது எடுத்துரைக்கும் தம்பி தயாநிதி மாறன், அஞ்சல் துறையின் அந்த உத்தரவை உடனே திரும்பப் பெற்றாக வேண்டும் என வலியுறுத்தியிருக்கிறார்.
ஏற்கனவே ரயில்வேயில் தமிழைப் புறக்கணிக்கும் வகையிலான சுற்றறிக்கை வெளியானபோதும், கழகத் தலைவரும் உங்களில் ஒருவனுமான என் ஆலோசனைப்படி தென்னக ரயில்வே பொது மேலாளரை நேரில் சந்தித்து வலியுறுத்தி, உடனடியாக அந்த சுற்றறிக்கையைத் திரும்பப் பெறச் செய்யும் முயற்சியிலும் தம்பி தயாநிதி மாறன் சிறப்பான முறையில் ஈடுபட்டார். நமது முயற்சிக்கு நல்ல வெற்றி கிடைத்தது.
உச்சநீதிமன்றத் தீர்ப்புகளை ஒரே காலத்தில் மொழிபெயர்ப்பு செய்வதற்கு உத்தேசிக்கப்பட்டிருக்கும் தாய்மொழிகளின் பட்டியலில், தமிழை உடனடியாகச் சேர்க்க வேண்டும் என்கிற தி.மு.க.வின் கோரிக்கை அடங்கிய மனுவை, கழகத்தின் மக்களவை உறுப்பினர் டி.ஆர்.பாலு அவர்கள் உச்சநீதிமன்றத் தலைமை நீதியரசர் ரஞ்சன் கோகாயை நேரில் சந்தித்து வழங்கி-வலியுறுத்தியுள்ளார். செம்மொழித் தகுதி பெற்றதும்-எட்டாவது அட்டவணையில் இடம்பெற்றுள்ள மொழிகளில் மூத்த மொழியும், தமிழ்நாட்டில் 8 கோடி மக்களின் (ஆட்சி) அலுவல் மொழியுமான தமிழ் மொழியில் உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் வெளியிடப்பட ஆவன செய்யப்பட வேண்டும் என அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.
தி.மு.க.வின் மூத்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமின்றி, மக்களின் பேராதரவுடன் வெற்றி பெற்று முதன்முறையாக மக்களவைக்குச் சென்றுள்ள இளைய உறுப்பினர்களும் நாள்தோறும் அவையிலும் அதன் தொடர்ச்சியாகவும் தமிழ்நாட்டு நலன் சார்ந்து அயராது பாடுபட்டு வருகின்றனர்.
கழகக் கூட்டணி சார்பில் வெற்றி பெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர், சமூகக் கெடுதலைக் களைந்திட சளைக்காது உழைத்திடும், அன்புச் சகோதரர் தொல்.திருமாவளவன் எம்.பி. அவர்கள் மக்களவையில் உரையாற்றும்போது, ரயில்வே துறையில் அந்தந்த மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கே முன்னுரிமை கொடுத்து பணிகள் வழங்க வேண்டும் என்பதைப் புள்ளிவிவரங்களுடன் எடுத்துரைத்திருக்கிறார்.
கழகத்தின் வெற்றிச் சின்னத்தில் களம் கண்டு எம்.பி.யான விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ரவிக்குமார் அவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான கடிதங்கள் இந்தியில் மட்டுமே வழங்கப்படுவதாக, அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் ஆங்கிலத்திலும் வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளார்.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் எம்.பி. அ.கணேசமூர்த்தி அவர்கள், தனது தொகுதி பிரச்சினைகள் குறித்து எடுத்துரைத்து தீர்க்க வலியுறுத்தினார். இந்திய ஜனநாயகக் கட்சியின் பாரிவேந்தர் எம்.பி. அவர்கள் பெரம்பலூர் இருப்புப் பாதைத் திட்டம் குறித்து கவனம் ஈர்த்திருக்கிறார். கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் எம்.பி. ஏ.கே.பி.சின்ராஜ் அவர்கள், கோழிப் பண்ணைத் தொழிலில் ஏற்படும் பிரச்சினைகளை தீர்த்திட வற்புறுத்தியுள்ளார்.
என்ன செய்ய முடியும் எனக் கேட்டவர்களின் வாயை அடைக்கும் வகையில் தமிழ்நாட்டிலிருந்து வெற்றி பெற்ற தி.மு.க. மற்றும் தோழமைக் கட்சி மக்களவை உறுப்பினர்கள் மக்கள் பணியில் அயராது ஈடுபட்டு வருகிறார்கள். தமிழ்நாட்டின் உரிமைகளை நிலைநாட்ட ஜனநாயக வழியில்-அரசியல் சாசனம் வழங்கியுள்ள வழியில் அனுதினமும் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால், மாநிலத்தில் ஆட்சியில் உள்ளவர்களோ,நம்முடைய வெற்றியையும் அதன் தொடர்ச்சியாக நடைபெறுகிற தூய பணிகளையும் பொறுத்துக் கொள்ளமுடியாமல், மிட்டாய் கொடுத்து குழந்தைகளை ஏமாற்றுவதுபோல வாக்குறுதிகள் கொடுத்து மக்களை ஏமாற்றி வெற்றி பெற்றுவிட்டதாக ஜனநாயகத்தன்மை அற்றவர்களாக - நாக்கில் நரம்பில்லாதவர்களாக, நாலாந்தரத்தில் பேசுகிறார்கள்.
தி.மு.கழகத்தின் மீதும் அதன் தோழமை மீதும் மக்கள் வைத்த நம்பிக்கையின் வெளிப்பாடுதான் 37 எம்.பி.க்கள் மற்றும் 13 எம்.எல்.ஏக்களின் மகத்தான வெற்றி. தி.மு.க. மிட்டாயும் கொடுக்கவில்லை. மக்கள், குழந்தைகளும் இல்லை. வாக்காளர்களை மகேசர்களாகக் கருதிடும் இயக்கம் திமுக. நீட் தேர்வு விலக்குக்கு தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினால் ஆவனசெய்கிறோம் என்று போலி மிட்டாய் கொடுத்தவர்கள் மத்திய ஆட்சியாளர்கள்.
அந்தக் குச்சி மிட்டாயை வாயில் கவ்விக்கொண்டு தாங்களும் ஏமாந்து போய்-மக்களையும் ஏமாற்றியவர்கள் மாநிலத்தில் உள்ள அடிமை ஆட்சியாளர்கள். அதுபோலவே, பொருளாதார இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தினால் 25% கூடுதல் இடங்கள் என்கிற அடுத்த குச்சி மிட்டாயையும் மத்திய ஆட்சியாளர்கள் நீட்டியிருக்கிறார்கள். அதனையும் வாங்கி வாயில் மென்றுகொண்டு , தமிழ்நாட்டின் நூற்றாண்டு கால சமூக நீதிக் கொள்கைக்கு சவக்குழி வெட்டத் தயாராகிவிட்டது எடப்பாடி பழனிசாமி அரசு.
நச்சுப் பாம்புகளான நீட், பொருளாதார இடஒதுக்கீடு உள்ளிட்டவற்றிற்கு பால் வார்க்கும் இந்தப் படுமோசமான சக்திகளை வீழ்த்தி சமூக நீதியையும் தமிழ்நாட்டின் தன்மானத்தையும் பாதுகாப்பதற்கு ஜனநாயக ரீதியான வெற்றிகளைக் கழகம் பெற்றாக வேண்டும்.
மக்களவைத் தேர்தலில் நமக்குக் கிடைத்த மகத்தான வெற்றியும், அதனைத் தொடர்ந்து மாநிலங்களவைக்குச் செல்லவிருக்கும் ஆற்றல்மிகு மூவரின் பணியும் நமக்கு ஊக்கம் தருவதாக அமைந்துள்ளன. மாநிலங்களவைக்குத் தேர்வாகியிருக்கும் புதிய உறுப்பினர்களான திரு.வைகோ, திரு.சண்முகம், திரு.வில்சன் மூவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்வதுடன், அடுத்த களம் நமக்குத் தயாராக இருக்கிறது என்பதையும் நினைவூட்டிட விரும்புகிறேன்.
திட்டமிட்டு சதி செய்து-வீணாகப் பழி போட்டு நிறுத்தி வைக்கப்பட்ட வேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் ஆகஸ்ட் 5ஆம் நாள் நடைபெறவிருக்கிறது. பொதுத் தேர்தலில் படுதோல்வி அடைந்த மக்கள் விரோத மத்திய-மாநில ஆட்சியாளர்கள் அதே கூட்டணியுடன் வேலூர் தேர்தலில் அதிகாரத்தைப் பயன்படுத்தி வெற்றியை எப்படியாவது அபகரிக்கமுடியுமா என ஆலோசனை நடத்துகிறார்கள்.
தி.மு.க.வின் வெற்றியை அவர்களின் சூழ்ச்சிகளால் தள்ளிப் போட்டிருக்கலாமே தவிர, எந்நாளும் தட்டிப் பறித்திட முடியாது. வேலூர் கோட்டை எப்போதும் கழகத்தின் வெற்றிக் கோட்டை, இப்போதும் அதில் எள்ளளவும் மாற்றமில்லை என்பதை நிரூபித்திடும் வகையில், கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளாம் உங்களின் களப்பணி ஒப்பிட்டுக் காட்ட முடியாத உயர்பணியாக அமைந்திட வேண்டும்.
சட்டமன்றத் தொகுதிவாரியாக நியமிக்கப்பட்டிருக்கும் பொறுப்பாளர்களுடன் இணைந்து, அவரவருக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் களப்பணியாற்றிட வேண்டும். சற்று கண்ணயர்ந்தாலும், அதிகார வெறியில் ஆட்டம் போட்டிட ஆட்சியாளர்கள் ஆயத்தமாக இருக்கிறார்கள்.
அதற்கு இடம்தராத வகையில், கழகத்தினரின் பணி தொடங்கிட-தொடர்ந்திட வேண்டும். உங்களில் ஒருவனான நான் நேரில் வருவேன். உங்கள் பணிகளை உங்களுடன் பங்கேற்பேன். எப்போதும் போல் மக்களுடன் இணைந்திருப்பேன். மக்கள் நம் மீது வைத்துள்ள நம்பிக்கையின் அடையாளமாக வேலூர் தொகுதியிலும் மகத்தான வகையிலே வெற்றிக் ‘கதிர்’ ஒளி திசை எட்டும் வீசட்டும்.
தி.மு.கழகத்தின் சார்பில் மக்களவையிலும் மாநிலங்களவையிலும் ஒலிக்கின்ற ஒவ்வொரு குரலும் நம் உரிமைக்கான போர்க் குரலாகும். அதற்கேற்ப, வெற்றிப் பயணம் தொடரட்டும்! உரிமைப் போர்க்குரல் உயரட்டும்!
Also Read
-
’சமத்துவம் மலரட்டும்' : பள்ளி பெயர் பலகையில் இருந்த ‘அரிசன் காலனி’ என்பதை அழித்த அமைச்சர் அன்பில் மகேஸ்!
-
”மழையை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு தயார்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!
-
ரூ.80 கோடி : 12,100 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
”உ.பி மக்களுக்கு நீதி வழங்க வேண்டும்” : துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு பிரியங்கா காந்தி கண்டனம்!
-
தமிழ்நாடு சட்டப்பேரவை டிசம்பர் 9ஆம் நாள் கூடுகிறது! : சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு!