M K Stalin
“சட்டமன்ற தேர்தலிலும் பாஜக- அதிமுகவுக்கு மரண அடி கொடுக்கத் தயாராகுங்கள்”: ஸ்டாலின் சூளுரை!
திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நிறுவப்பட்டுள்ள முத்தமிழறிஞர் கலைஞர் மற்றும் பேரறிஞர் அண்ணா திருவுருவச் சிலைகளைத் திறந்து வைத்தார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின். சிலைத் திறப்பு விழாவுக்குப்பின் திருச்சி தென்னூர் உழவர் சந்தை திடலில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், முரசொலி நிர்வாக ஆசிரியர் உதயநிதி ஸ்டாலின், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தேசிய தலைவர் காதர் மொய்தீன், முன்னாள் அமைச்சர்கள் கே.என்.நேரு எம்.எல்.ஏ, ஐ.பெரியசாமி எம்.எல்.ஏ, காங்கிரஸ் மூத்த தலைவர் திருநாவுக்கரசர் எம்.பி, இந்திய ஜனநாயக கட்சித் தலைவர் பாரிவேந்தர் எம்.பி, மாநிலங்களவை எம்.பி திருச்சி சிவா மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் பலரும் பங்கேற்றனர்.
தி.மு.க நிர்வாகிகள், கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாகக் கலந்துகொண்ட இந்தக் கூட்டத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் எழுச்சியுரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது, “திராவிட முன்னேற்றக் கழகத்தின் தீரர்கள் கோட்டை நம் திருச்சி. இந்த நாடாளுமன்றத் தேர்தலில் பெற்ற வெற்றிக்கான நன்றி அறிவிப்புக் கூட்டம் மட்டுமல்ல இது. அடுத்த சட்டமன்றத் தேர்தலிலும் பெரும் வெற்றி பெறுவோம் என சூளுரைக்கும் கூட்டம்.
5 மாதங்களுக்கு முன்பே கூட்டியிருக்கவேண்டிய காவிரி ஆணையக் கூட்டத்தைச் சமீபத்தில் கூட்டினீர்கள். தமிழகத்திற்குத் தரவேண்டிய தண்ணீரை கர்நாடகா வழங்குகிறதா என்பதைக் கண்காணிப்பதுதான் காவிரி ஆணையத்தின் பணி. அங்கு மேகதாது அணை கட்டும் பிரச்னை பற்றி விவாதம் நடத்தப்படுகிறது. அது காவிரி ஆணையமா? கர்நாடக ஆணையமா?
தமிழகத்தில் அத்தனை தொகுதிகளிலும் தோற்ற காரணத்தால் தமிழகத்தை அழித்தொழிக்க முடிவுசெய்துவிட்டது மத்திய பா.ஜ.க அரசு. எட்டு வழிச்சாலையைக் கொண்டுவருவதில் ஆர்வம் காட்டும் எடப்பாடி அரசு காவிரி நீரை தமிழகத்திற்குக் கொண்டு வர நினைக்கவில்லை. ஏனெனில், எட்டு வழிச்சாலை திட்டத்தில் கமிஷன் வரும். காவிரி தண்ணீரைக் கொண்டுவந்தால் கமிஷன் கிடைக்காது. லாபத்தை அடிப்படையாக வைத்துத்தான் தமிழகத்தில் ஆட்சி நடக்கிறது.
ஹைட்ரோகார்பன் திட்டமாக இருந்தாலும் சரி; எட்டுவழிச் சாலை திட்டமாக இருந்தாலும் சரி.. தமிழகத்திற்குக் கேடு தரும் திட்டங்களை வரவேற்கும் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக நாடாளுமன்றத் தேர்தலில் மரண அடி கொடுத்திருக்கிறீர்கள். சட்டமன்றத் தேர்தலிலும் மரண அடி கொடுக்கத் தயாராக இருக்கவேண்டும்.
ஜூன் 12-ல் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வாரின் பெயரில் நடக்கும் மாபெரும் மனிதச் சங்கிலி போராட்டத்தில் தி.மு.க பங்கேற்கும்.
நீட் தேர்வுக்கு பலிபீடமாக மாறிக்கொண்டிருக்கிறது தமிழகம். கடந்த ஆண்டு 2 மாணவிகளையும், இந்த ஆண்டு 3 மாணவிகளையும் பலிகொடுத்திருக்கிறோம். பகிரங்கமாகச் சொல்கிறேன், இந்த தற்கொலைகளுக்குக் காரணம் மத்திய அரசும், மாநில அரசும் தான். இந்த ஆட்சிகளுக்கு முடிவு கட்டத் தயாராகுங்கள்.
நடந்து முடிந்த தேர்தல்களில் பெரும் வெற்றிபெறச் செய்த அத்தனை வாக்காளர்களுக்கும், தி.மு.க மற்றும் கூட்டணிக் கட்சிகளின் சார்பில் இதயபூர்வமான நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்” எனப் பேசினார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!