M K Stalin

எளிமையின் இலக்கணத்துக்கு உதாரணம் ஆர்.வி. ஜானகிராமன்: அவரது மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்

புதுச்சேரி முன்னாள் முதலமைச்சரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினருமான திரு ஆர்.வி.ஜானகிராமன் அவர்கள் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மறைவெய்தினார் என்ற அதிர்ச்சியான செய்தியறிந்து துயரமடைந்தேன். அவரது மறைவிற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள நெல்லித்தோப்பு சட்டமன்றத் தொகுதியில் 1985ல் வெற்றி பெற்ற அவர் அதே தொகுதியில் போட்டியிட்டு ஐந்து முறை சட்டமன்ற உறுப்பினரானவர். பொதுப்பணித்துறை அமைச்சராகவும், முதலமைச்சராகவும் பணியாற்றி புதுச்சேரி மக்களுக்காகவும், அந்த மாநில முன்னேற்றத்திற்காக அரிய பணிகளை ஆற்றியவர்.

“மேகலா பிக்சர்ஸில்” மேலாளராக பணியாற்றிய அவர் பள்ளிப் பருவத்திலேயே பொது வாழ்க்கைக்கு வந்தவர். 1960 முதல் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டு- புதுச்சேரி மாநிலக் கழக அமைப்பாளராக பணியாற்றி- திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிப் பொறுப்பினை ஏற்கவும், தொடர்ந்து இயக்கம் கம்பீரமாக நிற்கவும், திராவிட இயக்கத்தின் கொள்கை மாநிலத்தில் எங்கும் பரவவும் பாடுபட்டவர்- ஓடி ஓடி உழைத்தவர் திரு ஜானகிராமன் என்பதை நானறிவேன். என் மீது தனிப்பற்றும், பாசமும் வைத்திருந்த அவரை இழந்து இன்று தவிக்கிறேன்.

“எளிமைக்கு இலக்கணம் தேடினால் திரும்பிய பக்கமெல்லாம் தெரிகிற உருவம் புதுவை ஆர்.வி.ஜானகிராமன்தான்” என்று தலைவர் கலைஞர் அவர்களால் பாராட்டப்பட்டு, 2005 ஆம் ஆண்டே திரு ஜானகிராமனுக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் உயரிய முப்பெரும் விழா விருதான “அண்ணா விருது” வழங்கி கௌரவித்தார் தலைவர் கலைஞர். பேரறிஞர் பெருந்தகை அண்ணா, பெருமதிப்பிற்குரிய அன்னை இந்திரா காந்தி அம்மையார் ஆகியோருக்கு “கார்” ஓட்டும் அரிய வாய்ப்பினைப் பெற்ற அவர், தலைவர் கலைஞர் அவர்கள் மீதான பாசத்தை தணியாத தாகம் போல் என்றும் வைத்திருந்தவர்.

தலைவர் கலைஞர் அவர்களின் சொல்லைத் தட்டாத கழக தொண்டராக கடைசி வரை விளங்கிய ஆர்.வி ஜானகிராமனுக்கும், தலைவர் கலைஞர் அவர்களுக்கும் இடையிலான உறவு- புதுச்சேரி மக்களுக்கு பல வளர்ச்சித்திட்டங்களை செயல்படுத்தி, மாநிலத்திற்கு பெருமை சேர்த்த ஒப்பற்ற உறவாக திகழ்ந்தது. புதுச்சேரியில் கழகத்தின் முன்னணித் தலைவரான- திராவிட முன்னேற்றக் கழகத்தின் போர்ப்படைத் தளபதிகளில் ஒருவரான திரு ஆர்.வி ஜானகிராமனை இழந்து சோகத்தில் மூழ்கியுள்ள அவரது குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினர்களுக்கும், புதுச்சேரி கழக தொண்டர்களுக்கும் எனது ஆறுதலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.