M K Stalin

தி.மு.க ஆட்சி அமைந்ததும் மக்களின் குறைகள் தீர்க்கப்படும் - மு.க.ஸ்டாலின் தேர்தல் பரப்புரை!

மதுரை திருப்பரங்குன்றம் தொகுதி சட்டமன்ற தி.மு.க வேட்பாளர் டாக்டர் சரவணன் ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கைத்தறி நகர் பகுதியில் நெசவாளர்கள் செளராஷ்டிர மக்களிடையே கலந்துரையாடினார் அப்போது முதலில் சௌராஷ்டிர மொழியில் பேசி வணக்கம் தெரிவித்து டாக்டர் சரவணனுக்கு வாக்கு சேகரித்தார்

தொடர்ந்து பேசிய அவர் : மோடி ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப இந்த பகுதி மக்கள் நாடாளுமன்ற தேர்தலில் கை சின்னத்திற்கு வாக்கு அளித்து உள்ளீர்கள். இப்போது சட்டமன்ற தேர்தல் வருகிறது. அது ஏற்கனவே இந்த தொகுதியில் வெற்றி பெற்ற ஏ.கே.போஸ் இறந்ததால் இடைத்தேர்தல் வந்துள்ளது என பலர் நினைக்கின்றனர். ஆனால் , ஏ.கே.போஸ் போட்டியிட்ட போது ஜெயலலிதா சுயநினைவில்லாமல் இருந்த போது கை ரேகை வாங்கியது செல்லாது என்று சரவணன் வழக்கு போட்டு வெற்றி பெற்றதால் இந்த தேர்தல் வந்துள்ளது. ஜெயலலிதாவை வைத்தே பொய் சொல்லி வெற்றி பெற்றவர்கள் அ.தி.மு.க.வினர்.

இடைத்தேர்தலில் தி.மு.க.வெற்றி பெறுவதும், ஆட்சி அமைப்பதும் உறுதி என்று தெரிந்து தான் எடப்பாடி ஆட்சி 3 எம்.எல்.ஏ.க்களுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார்கள். அதற்காக தான் நான் சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்து உள்ளேன்.

தலைவர் கலைஞர் இறந்த நேரத்தில் அவரது உடலை அடக்கம் செய்ய 6 அடி நிலம் கேட்டு எடப்பாடி வீட்டுக்கே நான் கனிமொழி உள்ளிட்டோர் சென்றோம். 6 அடி நிலம் கேட்டோம். ஆனால் அரசு மறுத்து விட்டது. நீதிமன்றம் கலைஞர் முதுபெரும் தலைவர் ஆகவே அவரது உடலை அங்கே அடக்கம் செய்யலாம் உத்தரவிட்டது நாங்கள் அடக்கம் செய்தோம். கலைஞருக்கு 6 அடி இடம் தராத எடப்பாடி அரசுக்கு நீங்கள் மீண்டும் இடம் தரலாமா என்றார்.

மேலும், அண்ணா , கலைஞர் நெசவாளர்கள் வாழ்வு உயர வழிசெய்தனர்.கலைஞர் ஆட்சியில் நெசவாளர்களுக்கு 100,500யுனிட் இலவச மின்சாரம் அளித்தது. கைத்தறி நெசவாளர்களின் ஹட்கோ கடன் தள்ளுபடி செய்தது திமுகதான் என்றவர். 37முறை டெல்லி சென்ற அதிமுக அமைச்சர்கள் ஜி.எஸ்.டிக்காக கோரிக்கை வைக்கவில்லை. ஜி.எஸ்.டி பிரச்சினைகள் தீர்த்துவைக்க தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் நடவடிக்கை எடுக்கும் என்றார்.

முன்னதாக, 3 ஆண்டுகளாக நெசவாளர்களுக்கு கூலி உயர்வு செய்யப்படவில்லை எனவும் நெசவுத் தொழிலாளர்கள் நலிவடைந்து உள்ளதாக நெசவாளர்கள் பெண்கள் கோரிக்கை விடுத்தனர். டாக்டர் கலைஞர் ஆட்சியில் நெசவாளர் குடும்பத்திற்கு செளராஷ்டிரா கல்லூரிக்கு 28.17 ஏக்கர் நிலம் இலவசமாக வழங்கியது உட்பட பல்வேறு நலத் திட்டங்கள் செய்யப்பட்டது,ஆனால் இப்போது நெசவாளர் குடியிருப்பு பகுதி அடிப்படை வசதிகள் எதுவுமின்றி இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் கூறினர்.