jallikattu

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு : 17 காளைகளை அடக்கி 2-ம் முறையாக முதலிடம் பிடித்த வீரர் கார்த்திக் !

தமிழர் திருநாளான பொங்கல் திருநாள் இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், மதுரை அவனியாபுரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து துவங்கி வைத்தார். இந்த போட்டியில் 1000 காளைகள், 600 மாடுபிடி வீரர்கள் கலந்துகொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்ற இந்த போட்டியானது தற்போது நிறைவடைந்துள்ளது. இந்த போட்டியில் அவனியாபுரத்தை சேர்ந்த மாடுபிடி வீரர் கார்த்திக் என்பவர் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். இந்த போட்டியில் மொத்தம் 817 காளைகள் மற்றும் 435 போட்டியாளர்கள் பங்கேற்றனர். இதில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வீரர்கள் பங்கேற்றனர்.

கோப்பு படம்

இந்த போட்டியில் மாடுபிடி வீரர்கள் 22 பேரும், மாட்டின் உரிமையாளர்கள் 25 பேரும், பார்வையாளர்கள் 2 பேரும், சார்பு ஆய்வாளர், தலைமை காவலர், காவல்துறையினர், போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த மாடுபிடி வீரர் ரஞ்சித் உட்பட மொத்தம் 51 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதில் 10 பேர் மேல் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மாடுபிடி வீரர் கார்த்திக்

தொடர்ந்து நடைபெற்ற இந்த போட்டியில் 17 காளைகளை அடக்கி அவனியாபுரத்தை சேர்ந்த கார்த்திக் என்பவர் முதலீடத்தை பெற்றுள்ளார். இந்த கார்த்தி கடந்த 2022-ம் ஆண்டு முதல் பரிசு வென்றவர் ஆவார். இவரைத்தொடர்ந்து 13 காளைகளை அடக்கி அவனியாபுரத்தை சேர்ந்த மாரியப்பன் ரஞ்சித் என்பவர் 2-ம் இடத்தையும், 9 காளைகளை அடக்கி தேனி மாவட்டம் சீலையம்பட்டியை சேர்ந்த முத்துக்கிருஷ்ணன் என்பவரும், சிவகங்கை திருப்புவனத்தை சேர்ந்த முரளிதரன் என்பவர் 3-ம் இடத்தையும் பெற்றுள்ளனர்.

இதையடுத்து காளைகளை அடக்கி முதலிடம் பெற்ற கார்த்திக்கிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் கார் பரிசாக வழங்கப்பட்டது. மேலும் சிறந்த காளையாக தேர்ந்தேடுக்கப்பட்ட கார்த்திக்கின் காளைக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் கார் பரிசாக வழங்கப்பட்டது. இந்த பரிசினை அமைச்சர்கள் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், பி.மூர்த்தி ஆகியோர் வழங்கினர்.

Also Read: “தை முதல் நாளே தமிழ் புத்தாண்டு” : முத்தமிழறிஞர் கலைஞர் முழங்கியது ஏன்? - சிறப்புக் கட்டுரை !