India

நீதிமன்றத்தில் காணொளி மூலம் வழக்கு விசாரணை! : டெல்லி காற்று மாசு எதிரொலி!

இந்தியாவின் தலைநகரான டெல்லியில் உச்சபட்ச காற்று மாசு அபாயம் ஏற்பட்டு வரும் நிலையில், நீதிமன்றங்களாலும் டெல்லி அரசாலும் பல்வேறு மாசு தடுப்பு நடவடிக்கைகள் முன்மொழியப்பட்டு வருகின்றன.

பள்ளி மாணவர்களுக்கு காணொளி மூலம் வகுப்புகள், கட்டுமான பணிகளுக்கு தடை, பட்டாசு கிடங்குகளுக்கு சீல், அதிகப்படியான வாகன பயன்பாட்டிற்கு கட்டுப்பாடு, முதியவர்கள் மற்றும் நோயாளிகள் வீட்டை விட்டு வெளியே வர தடை என்பவை, டெல்லி அரசு மற்றும் நீதிமன்றங்கள் வகுத்த மாசு தடுப்பு நடவடிக்கைகளாக அமைந்துள்ளன.

இந்நிலையில், இது குறித்த விசாரணை உச்சநீதிமன்றத்தில் வந்த போது உச்சநீதிமன்ற நீதிபதிகள், “டெல்லி தலைநகரில் காற்று மாசு உச்சம் தொடும் வரை, ஒன்றிய பா.ஜ.க அரசு ஏன் வேடிக்கை பார்த்தது?” என கேள்வி எழுப்பி கண்டனம் தெரிவித்தனர்.

இதனையடுத்து, காற்று மாசு அதிகரிப்பின் காரணமாக நீதிமன்ற வழக்கு விசாரணைகளை காணொளி காட்சி மூலம் நடத்த ஒன்றிய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தலைவர் கபில் சிபில் ஆகியோர் தலைமை நீதிபதி அமர்வில் இன்று (நவம்பர் 19) கோரிக்கை விடுத்தனர்.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா, இது குறித்து ஆலோசனை நடத்திய பிறகு காணொளி காட்சி மூலம் வழக்குகளை விசாரிக்கலாம் என அறிவிப்பு விடுத்தார்.

இதனால், டெல்லியில் காற்று மாசு கட்டுக்குள் வரும் வரை, வழக்குகள் காணொளி வாயிலாக விசாரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read: LIC இணையதளப் பக்கத்தில் இந்தி! : பொதுநிறுவனங்களில் இந்தி திணிக்கப்படுவதற்கு கண்டனம்!