India

இடது கண்ணிற்கு பதில் வலது கண்ணில் அறுவை சிகிச்சை.. உ.பி. மருத்துவரின் அலட்சியத்தால் கதறும் சிறுவன்!

உத்தர பிரதேசத்தை சேர்ந்தவர் 7 வயது சிறுவன் யுதிஷ்டிர். இவருக்கு கடந்த சில நாட்களாகவே இடது கண்ணில் இருந்து நீர் வடிந்து வந்துள்ளது. இதன் காரணமாக இவரது தந்தை, சிறுவனை கிரேட்டர் நொய்டாவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கே சிறுவனை பரிசோதித்த மருத்துவர், அவரது கண்ணில் சிறிய பிளாஸ்டிக் போன்ற பொருள் இருப்பதாக கூறியுள்ளார்.

மேலும் அதனை விரைந்து அறுவை சிகிச்சை மூலம் அகற்ற வேண்டும் என்றும் கூறியுள்ளார். இதன் காரணமாக ரூ.45,000 பணத்திற்கு ஏற்பாடு செய்ததையயடுத்து கடந்த நவம்பர் 12-ம் தேதி சிறுவனுக்கு அறுவை சிகிச்சைக்கு தயார் செய்துள்ளனர். அதன்படி சிறுவனுக்கு கண்ணில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இதையடுத்து சிகிச்சை முடிந்த பின்னர் அன்றே சிறுவனை பெற்றோர் வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளனர். பின்னரே சிறுவனுக்கு இடது கண்ணனுக்கு பதில் வலது கண்ணில் தவறுதலாக அறுவை சிகிச்சை செய்தது பெற்றோர் கண்டறிந்தனர். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், உடனே மருத்துவமனைக்கு விரைந்து, இதுகுறித்து மருத்துவ நிர்வாகத்திடம் கேட்டனர்.

ஆனால் பாதிக்கப்பட்ட சிறுவனின் பெற்றோருக்கு அங்கிருந்த ஊழியர்கள் அலட்சியமாக பதிலளித்துள்ளனர். இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளான பெற்றோர், சம்பவம் குறித்து கவுதம் புத்த நகர் தலைமை மருத்துவ அதிகாரியிடம் புகார் அளித்தனர். இதைத்தொடர்ந்து சிறுவனின் பெற்றோர் அளித்த புகாரில், மருத்துவர் ஆனந்த் வர்மாவின் உரிமத்தை ரத்து செய்து, மருத்துவமனைக்கு சீல் வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக விசாரணை தொடங்கியுள்ளதாகவும், விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். மருத்துவமனை மற்றும் மருத்துவரின் அலட்சியத்தால் சிறுவனின் கண்கள் பாதிக்கப்பட்டுள்ள நிகழ்வு பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Also Read: தெரியாமல் 20 செ.மீ. Tooth Brush-ஐ விழுங்கிய பெண்... ஷாக்கான மருத்துவர்கள்... பிறகு நடந்தது என்ன?