India

உ.பி. : திருவிழாவுக்காக மண் எடுக்க சென்ற பெண்கள்... திடீரென சரிந்த மண்ணால், சிறுமி உட்பட 4 பேர் பலி !

உத்தர பிரதேசம் மாநிலம் கஸ்கஞ்ச் என்ற பகுதியில் அமைந்துள்ள ராம்பூர் - கடவூர் என்ற கிராமங்களுக்கு இடையே பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வந்துள்ளன. இந்த சூழலில் இதன் அருகில் இருக்கும் கஸ்பாமோகன்புரா என்ற கிராமத்தை சேர்ந்த பெண்கள் சிலர், இந்த பணி நடைபெற்று வரும் இடத்தில் இருந்து மண் எடுத்துள்ளனர். அப்போது ஏற்பட்ட மண் சரிவு காரணமாக சிறுமி உள்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

'திரியோதன்' என்ற பெயரில் கொண்டாடப்படும் விழாவையொட்டி அந்த கிராமத்தில் உள்ளவர்கள் வீடு மற்றும் அடுப்புகளுக்கு வர்ணம் பூசுவதற்காக மண் எடுப்பது என்பது வழக்கமாக இருந்துள்ளது. இந்த சூழலில் இந்த திருவிழாவிற்காக அந்த கிராமத்தை சேர்ந்த பெண்கள் இன்று காலை நேரத்தில் மண் எடுக்கச் சென்றுள்ளனர்.

அப்போது சுமார் 7 மணியளவில், அந்த பெண்கள் மண்ணை தோண்டி அள்ளிக்கொண்டிருக்கும்போது திடீரென மண் சரிவு ஏற்பட்டு குழியில் விழுந்துள்ளனர். இந்த விபத்தில் பெண்கள் சிலர் குழியில் விழுந்து தவித்த நிலையில், தகவலறிந்து விரைந்த அதிகாரிகள், 9 பேரை மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் இந்த 9 பேரில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த 4 பேரில் 10 வயதில் சிறுமி ஒருவரும் உள்ளார். மேலும் 5 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்துக்கு யாருடைய அலட்சியம் காரணமாக இருந்தாலும் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அம்மாநில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.

திருவிழாவுக்காக வீடு பூச்சுவேலைக்காக மண் அள்ளும்போது ஏற்பட்ட மண் சரிவில் சிக்கி சிறுமி உள்பட 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: சென்னை மக்களுக்கு கவனத்திற்கு: மழை காலங்களில் அரசின் நடவடிக்கைகளை அறிய வருகிறது Early Warning System App!