India

ஆம்புலன்ஸ் சர்ச்சை! : ஒன்றிய இணை அமைச்சர் சுரேஷ் கோபி மீது வழக்குப்பதிவு!

2024 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில், திருச்சூர் தொகுதியை வென்று, கேரளத்தில் கால் பதிக்க இயலாமல் தவித்து வந்த பா.ஜ.க.விற்கு, ஒரு இடம் கிடைக்க வழிவகுத்தார் நடிகர் சுரேஷ் கோபி.

அதனால், அவருக்கு ஒன்றிய இணை அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டது. இந்நிலையில், கேரளாவின் பா.ஜ.க ஒற்றை மக்களவை உறுப்பினரான சுரேஷ் கோபி, நீதிமன்ற கட்டுப்பாடுகளை மீறியுள்ளார் என்ற சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

கோடை காலத்தில் நடக்கக்கூடிய, கேரளத்தின் சிறப்புமிகுந்த விழாவான திருச்சூர் பூரம் விழாவிற்கு, ஒன்றிய இணை அமைச்சரும், பா.ஜ.க மக்களவை உறுப்பினருமான சுரேஷ் கோபி வருகை தரும் போது, ஆம்புலன்சில் வந்ததாக புகார் எழுந்தது.

இதனை அப்போதைய அளவில், சுரேஷ் கோபி உறுதியாக மறுத்ததோடு மட்டுமல்லாமல், வேண்டுமென்றால் சிபிஐ விசாரணை நடத்திக்கொள்ளுங்கள் என சவால் விட்டார்.

இது குறித்து, திருச்சூர் மாவட்ட பா.ஜ.க தலைவர் கே.கே. அனீசு குமார், “திருச்சூர் நகரம் வரை கோபி அவர்கள், தனது சொந்த வாகனத்தில் தான் வந்தார். அதன் பிறகு விழா நடக்கும் இடத்திற்கு தனியார் வாகனம் வர இயலாத போதுதான், ஆம்புலன்சை பயன்படுத்தினார்” என காரணம் தெரிவித்தார்.

இதனையடுத்து, சுரேஷ் கோபியே தற்போது ஆம்புலன்சில் தான் வந்தேன். கால் வலி காரணமாக, கூட்டத்தில் நடக்கமுடியாதது தான், ஆம்புலன்சில் வர காரணம் என்று மழுப்பியுள்ளார்.

இந்நிலையில், தவறை ஒப்புக்கொண்ட சுரேஷ் கோபி மீது இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் சுமேஷ் புகாரின் பேரில் கேரள காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

Also Read: கனமழையால் மண் சரிவு! : மேட்டுப்பாளையம் - குன்னூர் மலை ரயில் இன்று ரத்து!