India

“தனித்துவத்தை நிலைநாட்டும் தமிழ் மொழி!” : கேரளத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!

இந்திய ஊடகத்துறையின் மூத்த செய்தித்துறை நிறுவனமான மலையாள மனோரமா நடத்திய இலக்கிய கலாச்சார நிகழ்ச்சியில், தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து, இன்று (நவம்பர் 2) கேரளாவில் நடைபெற்ற அந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “தமிழ்நாட்டின் திராவிட அரசியல் முன்னெடுப்புகள் என்பது மொழி உணர்வையும், பண்பாட்டு உணர்வையும் மையப்படுத்தியது. தமிழ்நாட்டின் ஆழமிக்க மொழி மற்றும் பண்பாடு அடிப்படையிலான வரலாறு, அதன் சமூக அரசியலுக்கு அடித்தளமாகவும் விளங்கி வருகிறது.

மொழி, இலக்கியம் மற்றும் அரசியலின் அடிப்படையில், தமிழ்நாட்டிற்கும் கேரளத்திற்கும் இணக்கமான வரலாறு உண்டு. 1924ஆம் ஆண்டு கேரளத்தில் நடந்த வைக்கம் போராட்டத்தை முன்நின்று நடத்தி வெற்றி பெற்றார் தந்தை பெரியார். அதே போல, கேரளாவில் பிறந்த டி.எம்.நாயர், தமிழ்நாட்டில் நீதிக்கட்சியின் தொடக்கப்புள்ளியாக இருந்த தென் இந்திய நல உரிமை சங்கத்தை தொடங்கினார். அது தமிழ்நாட்டில் புது அரசியல் எழுச்சியை ஏற்படுத்தியது.

அதன் தொடர்ச்சியாகவே, தற்போது இந்தியாவின் வளர்ச்சி பெறும் மாநிலங்களில் முன்னணி இடத்தை தமிழ்நாடும், கேரளமும் பெற்று வருகிறது. இரு மாநிலங்களிலும் வெற்றிகரமான முறையில், பாசிச - வகுப்புவாத நடவடிக்கைகளுக்கு முட்டுக்கட்டையிடப்பட்டு வருகின்றன.

தமிழ்நாட்டில் திராவிட இயக்கம் தோன்றுவதற்கு முன்பு, தமிழ் இலக்கிய பெருமை என்பது பக்தி, புராணம் சார்ந்ததாக தான் இருந்தது. ஆனால், எங்கள் தலைவர்களான அறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் உள்ளிட்டோரின் முன்னெடுப்புகளால், பகுத்தறிவு மற்றும் அறிவியல் சிந்தனை சார்ந்த தமிழ் இலக்கியங்களின் புகழ் மேலோங்க தொடங்கின.

தமிழ்நாட்டின் திராவிட இயக்கங்கள், தமிழ் மொழியை அடிப்படை அடையாளமாக வைத்து செயல்படத் தொடங்கியதற்கு, தமிழ் மொழி என்பது வெறும் தகவல் பரிமாற்ற கருவியாக மட்டுமல்லாமல், பெருமை மிகுந்த தனித்துவத்தை நிலைநாட்டும் வகையிலும் அமைந்துள்ளதே காரணம். அதற்கான எடுத்துக்காட்டு தான் இந்தி திணிப்புக்கு எதிரான நடவடிக்கையாகவும் உள்ளது” என்றார்.

Also Read: பாசிசத்துக்கு எதிரான மாநாட்டில் பங்கேற்க கூடாது : CPM MP-க்கு வெளிநாடு செல்ல அனுமதி மறுத்த பாஜக அரசு!