India

குஜராத் கலவரம் குறித்த பி.பி.சி ஆவண படத்துக்கான தடை : ஒன்றிய பா.ஜ.க அரசு 3 வாரத்தில் பதிலளிக்க வேண்டும்!

கடந்த 2002ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் ஜூன் வரை, குஜராத்தில் அரங்கேறிய கலவரம், இந்திய அளவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இக்கலவரத்தில் சுமார் 1000க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் அடித்துக்கொல்லப்பட்டனர். அதில் இடம்பெற்ற பெரும்பான்மையான வன்முறை நிகழ்வுகள், அம்மாநில காவல்துறையினராலேயே முன்னெடுக்கப்பட்டது.

அப்போதைய குஜராத் முதல்வராக இருந்த, தற்போதைய இந்திய பிரதமர் மோடி, அக்கலவரத்தை கையாண்ட விதம், கடும் கண்டனத்திற்குரியது உள்ளிட்ட பல உண்மை நிகழ்வுகளை ஆவணமாக்கி, பி.பி.சி வெளியிட்டது.

அந்த ஆவணப்படம் வெளியான சில மணிநேரங்களில், இந்திய அளவில் பெரும் கிளர்ச்சிக்கு வித்திட்டது. பிரதமர் மோடி மீதான பிம்பம் உடையத் தொடங்கியது.

இதனைத் தடுக்க, இந்திய அளவில் பி.பி.சி.யின் குஜராத் கலவரம் குறித்த ஆவணப்படத்திற்கு தடையிட்டது ஒன்றிய பா.ஜ.க அரசு.

உண்மையை மறைப்பது, பொய்களை ஆதரிப்பதற்கு சமம் என்று, ஒன்றிய பா.ஜ.க.வின் நடவடிக்கைக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். அதோடு மட்டுமல்லாமல், குஜராத் கலவரம் குறித்த பி.பி.சி ஆவணப்படம் மீதான தடையை நீக்கக்கோரி, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

தி இந்து பத்திரிகையின் ஆசிரியர் என்.ராம், நாடாளுமன்ற உறுப்பினர் மகுவா மொய்த்ரா, வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் ஆகியோர் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு இன்று மீண்டும் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, “20 மாதங்களாகியும் ஒன்றிய அரசு இதுவரை கூடுதல் பதில் மனு தாக்கல் செய்யவில்லை” என்று மனுதார்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மூன்று வாரத்தில் கூடுதல் மனு தாக்கல் செய்ய ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. பின்னர் வழக்கை ஜனவரி மாதத்திற்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்.

Also Read: ”தீபாவளிக்கு மக்கள் சொந்த ஊர் செல்வதற்கு வசதியாக 14,086 பேருந்துகள் இயக்கம்” : அமைச்சர் சிவசங்கர் தகவல்!