India

இணையதள சர்வர் கோளாறு : இண்டிகோ நிறுவனத்தின் விமான சேவை கடும் பாதிப்பு... முழு விவரம் என்ன?

இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தின், இணையதள சேவை நாடு முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளதால் சென்னையில் இருந்து புறப்படும் சுமார் 20 -க்கும் மேற்பட்ட இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன.

இந்தியா முழுவதும் உள்ள இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தின், இணையதள சர்வர் பாதிப்படைந்துள்ளது. இதை அடுத்து சென்னை விமான நிலையத்திலும், இன்று பகல் ஒரு மணி முதல், சென்னையில் இருந்து புறப்படும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான பயணிகளுக்கு, இணையதளம் மூலம் போர்டிங் பாஸ்கள் கொடுப்பதில் பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது.

இணையதள இணைப்பு ஒரே சீராக வராமல், விட்டு விட்டு வருவதால், பயணிகளுக்கு போர்டிங் பாஸ் வழங்குவதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளதால், தற்போது அவசர ஏற்பாடாக, போர்டிங் பாஸ்கள் கையினால் எழுதி கொடுக்கும் முறை தொடங்கியுள்ளது.

இதனால் சென்னையில் இருந்து புறப்படும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பணிகள் விமானங்களான திருச்சி, டெல்லி, பெங்களூர், அகமதாபாத், ஹூப்ளி, கோவா, சீரடி, மும்பை, புனே, கோவை, மதுரை உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக புறப்பட்டது.

இது குறித்து சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், “இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தின் இணையதள சேவை பாதிக்கப்பட்டுள்ளது. ஒரே சீராக இல்லாமல் விட்டு விட்டு இணையதள இணைப்புகள், செயல்படுகின்றன. இதனால் பயணிகளுக்கு போர்டிங் பாஸ்கள் வழங்குவதில் பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளன.

இதை அடுத்து சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானங்கள், சிறிது நேரம் காலதாமதமாக புறப்பட்டு செல்கின்றன. அதேபோல் இண்டிகோ ஏர்லைன்ஸ் இணையதளம் சேவை மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளது. மற்ற அனைத்து விமான நிறுவன விமான சேவைகளும் வழக்கம்போல் இயங்குகின்றன.

இண்டிகோ ஏர்லைன்ஸ் பொருத்தமட்டில் சென்னையில் மட்டும் இல்லை. இந்தியா முழுவதிலும் இண்டிகோ ஏர்லைன்ஸ் இணையதள தேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. அதை சீர் செய்யும் பணிகள் அகில இந்திய அளவில் நடந்து கொண்டு இருக்கிறது. இன்று மாலைக்குள் நிலைமை சீரடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது"என்று கூறப்பட்டுள்ளது.

Also Read: அது என்ன பள்ளிக் கூடமா? பா.ஜ.க பயிலரங்கமா? : ஒன்றிய அரசுக்கு சு.வெங்கடேசன் MP ஆவேச கேள்வி!