India

“லடாக் சிக்கலுக்கு 15 நாட்களில் தீர்வு காண வேண்டும்!” : சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் வலியுறுத்தல்!

இந்திய அரசியலமைப்பின் ஆறாவது அட்டவணை (6th schedule), பழங்குடி மக்களின் பகுதிகளை தன்னாட்சிப் பகுதிகளாக நிர்வகிக்கும் உரிமையை வழங்கிறது.

அதன்படி, அசாம், மேகாலயா, திரிபுரா மற்றும் மிசோரம் மாநிலங்களில் உள்ள சுமார் 10 மாவட்டங்கள், தன்னாட்சி உரிமைப் பெற்றுள்ளன.

இந்நிலையில், இந்திய நிலப்பரப்பின் வடமுனையில் இருக்கும் லடாக் பகுதியிலும் தன்னாட்சி உரிமைகள் அமல்படுத்தப்பட வேண்டும் என்பது லடாக் மக்களின் நீண்டகால கோரிக்கையாக அமைந்துள்ளது.

அது சார்ந்த போராட்டங்களும், லடாக்கில் பல முறை அரங்கேறியுள்ளன. இதனைத் தொடர்ந்து, டெல்லி காந்தி நினைவிடத்தில் அமைதி போராட்டம் நடத்த சென்ற லடாக் போராட்டக்காரர்களை ஒன்றிய பா.ஜ.க அரசு கைது செய்து இரண்டு நாட்கள் தடுப்பு காவலில் வைத்தது.

பின்னர் நேற்று மாலை விடுவிக்கப்பட்ட அவர்களை காந்தி நினைவிடம் செல்ல விடாமல் பல்வேறு இடங்களில் காவல்துறை தடுத்து நிறுத்தியதால் பதட்டமான சூழல் நிலவியது. காந்தி நினைவிடம் செல்லாமல் லடாக் திரும்பப் போவதில்லை என்று சமூக ஆர்வலர் சோனம் உறுதியாக அறிவித்தார்.

இதனை தொடர்ந்து வேறு வழி இன்றி காவல்துறை பாதுகாப்பில் நேற்று இரவு காந்தி நினைவிடம் செல்ல போராட்டகாரர்கள் அனுமதிக்கப்பட்டனர். அங்கு மரியாதை செலுத்திய அவர்கள் லடாக் போராட்டக் கோரிக்கையை வாசித்தனர். அப்போது, “15 நாட்களில் லடாக் சிக்கல்களுக்கு தீர்வுகாண வேண்டும்” என்று சோனம் வாங்சுக் வலியுறுத்தினார். அது தொடர்பான மனுவும் அதிகாரிகளிடம் வழங்கப்பட்டது.

Also Read: வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணி தீவிரம் : சென்னை மாநகராட்சி சார்பில் வாங்கப்பட்ட 36 படகுகள்!