India

100 மாணவர்களை வெயிலில் அமர வைத்த தனியார் பள்ளி... அலறிய பெற்றோர் : வெளியான திடுக்கிடும் காரணம் !

பாஜக ஆளும் உத்தர பிரதேசத்தின் சித்தார்த் நகரை அடுத்துள்ள இட்வா என்ற பகுதியில் அமைந்துள்ளது ஷ்யாம்ராஜி உயர்நிலைப் பள்ளி. இந்த தனியார் பள்ளியில் அந்த பகுதியை சேர்ந்த பல்வேறு மாணவர்களும் படித்து வருகின்றனர். இந்த சூழலில் இங்கு பயிலும் சுமார் 100 மாணவர்களை பள்ளிக் கட்டணம் கட்டவில்லை என்று, பள்ளியின் வெளியே அமர வைத்துள்ளார், அப்பள்ளியின் தாளாளர்.

அதாவது சுமார் 100 மாணவ - மாணவியர் சம்பவத்தன்று வழக்கம்போல் பள்ளிக்கு சென்றுள்ளனர். அப்போது அந்த மாணவர்கள் பள்ளி வளாகத்தில் இருந்து வெளியே துரத்தப்பட்டுள்ளனர். மேலும் பள்ளி வாசலில் உள்ள மண் தரையில் அவர்கள் அனைவரையும் அமரச் செய்து, அதனை வீடியோவாக எடுத்துள்ளார் அப்பள்ளியின் தாளாளர் சைலேஷ் குமார் திருப்பதி.

மேலும் அந்த வீடியோவை மாணவர்களின் பெற்றோர் இருக்கும் வாட்சப் குழுவில் பகிர்ந்து பள்ளி கட்டணத்தை விரைந்து கட்டுமாறு எச்சரிக்கை விடுத்துள்ளார். தனியார் பள்ளி தாளாளரின் கொடூர செயலின் இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி கண்டனங்கள் குவிந்தது. மேலும் இது குறித்து கல்வித்துறை அலுவலர்களுக்கும் தெரியவர, உடனே இதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது.

இந்த விசாரணையின்போது, பள்ளி தாளாளர் சைலேஷ், தனக்கு வங்கியில் கடன் இருப்பதாகவும், அதனை விரைந்து கட்டுவதற்கு அழுத்தம் இருப்பதாகவும், அதனால் ரூ.10 ஆயிரம் முதல் லட்சக்கணக்கில் பள்ளிக் கட்டணம் செலுத்தாத மாணவர்களை வீடியோ எடுத்து பெற்றோருக்கு அனுப்பியதாகவும் தெரிவித்தார். அதோடு மாணவர்கள் சிறிது நேரம் மட்டுமே வெளியில் இருந்ததாகவும், பெற்றோர்களை அச்சுறுத்தவே இவ்வாறு செய்ததாகவும் தெரிவித்தார்.

இந்த விவகாரத்தில் தான் மனம் வருந்தி மன்னிப்பு கேட்பதாகவும் தெரிவித்துள்ளார். பள்ளி தாளாளரின் இந்த செயலுக்கு கண்டனங்கள் குவிந்து வரும் நிலையில், உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை வலுத்து வருகிறது. இதுகுறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Also Read: இதனால்தான் காந்தி கொல்லப்பட்டார்; காந்தியாரைப் போற்ற காரணமும் இதுதான்... - கி.வீரமணி கூறுவது என்ன?