India

”முதலமைச்சர் பதவியை ரூ.2,500 கோடிக்கு விற்ற மோடி” : சித்தராமையா பரபரப்பு குற்றச்சாட்டு!

கர்நாடக மாநிலத்தில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சியை கவிழ்க்க பா.ஜ.க பல்வேறு சதித்திட்டங்களை தீட்டி வருகிறது. தற்போது முதலமைச்சர் சித்தராமையா மீது ஊழல் குற்றச்சாட்டை பா.ஜ.க முன்வைத்து வருகிறது.

'மூடா' வழக்கில் முதலமைச்சர் சித்தராமையாவை விசாரிக்க தடை எதுவும் இல்லை என கர்நாடக உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, இந்த வழக்கில் அவரை சிக்கவைத்து சிறைக்கு அனுப்ப பா.ஜ.க முயற்சி செய்து வருகிறது. இப்படித்தான் புனையப்பட்ட ஊழல் வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால், ஹேமந்த் சோரன் ஆகியோரை அமலாக்கத்துறையை கொண்டு கைது செய்தது. தற்போது கர்நாடக முதலமைச்சர் மீது பா.ஜ.க கூறிவைத்துள்ளது.

இந்நிலையில், ”முதலமைச்சர் பதவியை ரூ.2,500 கோடிக்கு ஏலம் விட்டதாக சொந்த கட்சி தலைவர்களால் குற்றம் சாட்டப்பட்ட பிரதமர் மோடிக்கு ஊழல் பற்றிப் பேச எந்த தகுதியும் இல்லை” என சித்தராமையா குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், ”ஊழல் பற்றி பேசும் மோடி மீதே சொந்த கட்சி தலைவர்கள் சுமத்திய ஊழல் குற்றச்சாட்டு உள்ளது. முதல்வர் பதவியை ரூ.2500 கோடிக்கு ஏலம் மூலம் விற்றதாக பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் குற்றச்சாட்டு வைத்துள்ளார். இது குறித்து எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை. கர்நாடகாவில் ஊழல் கறைஇல்லாத பா.ஜ.க தலைவர்களை காட்டினால் அவர்களை கவுரவிக்க தயாராக இருக்கிறேன். என் மீதான ஊழல் குற்றச்சாட்டை பிரதமர் மோடியுடன் விவாதிக்க நான் தயாராக இருக்கிறேன்.” என தெரிவித்துள்ளார்.

Also Read: சென்னைக்கு பூஜ்யம் ... மும்பை மெட்ரோவுக்கு 25 ஆயிரம் கோடி... மாநில அரசின் பங்கையும் வழங்கிய ஒன்றிய அரசு !