India

5,501 பள்ளிகளில், 1ஆம் வகுப்பு சேர ஒருவரும் முன்வரவில்லை! : மத்தியப் பிரதேச பா.ஜ.க அரசின் மற்றொரு தோல்வி!

ஒன்றிய பா.ஜ.க ஆட்சியில், மாணவர்களின் கல்வி நிலை அதிகரிப்பதை விட, மோசடிகளும், குளறுபடிகளுமே அதிகரித்து வருகின்றன. அதற்கு ஒன்றிய கல்வித்துறையின் நடவடிக்கைகளே எடுத்துக்காட்டுகளாய் அமைந்துள்ளன.

பல இலட்சம் மாணவர்களின் மருத்துவ கனவை சிதைக்கும் வகையில் நீட் தேர்வு நடவடிக்கையும், அதில் நடக்கும் மோசடிகளும் அமைந்துள்ளது போல, ஒன்றிய அரசின் கீழ் செயல்படும் பல்கலைக்கழகங்களின் நுழைவுத் தேர்வில் மோசடி, இடஒதுக்கீட்டில் பாகுபாடு, கல்வி நிலையங்களில் மதப்பூசல்கள், காவித்திணிப்பு நடவடிக்கைகள் என அட்டூழியங்கள் வானுயர்ந்து நிற்கின்றன.

இந்நிலையில், ஒன்றிய பா.ஜ.க.வை தழுவி, ஆட்சி நடந்து வரும் மத்தியப் பிரதேசத்தின் உயர்கல்வி நிலையங்களில், பிரிவினைவாதத்தை ஆதரிக்கிற ஆர்.எஸ்.எஸ் கருத்தியலாளர்களின் புத்தகங்களை இடம்பெற ஆணை வெளியிடப்பட்ட நிகழ்வின் வடுவே நீங்காத நிலையில், பள்ளிக்கல்வியில் பா.ஜ.க.வின் திடுக்கிடும் தோல்வி ஒன்றும் அம்பலமாகியுள்ளது.

கடந்த செப்டம்பர் 13ஆம் நாள் வெளியான தகவலறிக்கையின் படி, மத்தியப் பிரதேச மாநில பா.ஜ.க அரசின் கீழ் செயல்படும் தொடக்கப்பள்ளிகளில் 1ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை கணிசமாக குறைந்துள்ளது என்பதே பா.ஜ.க.வின் அந்த தோல்வி.

மத்தியப் பிரதேசத்தின் 5,501 அரசு தொடக்கப் பள்ளிகளில் 1ஆம் வகுப்பில் சேர, ஒருவர் கூட முன்வரவில்லை என்பதே, அவ்வறிக்கையில் வெளிப்பட்ட முக்கிய செய்தியாக அமைந்துள்ளது.

மேலும், அம்மாநில பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் உதய் பிரதாப் சிங்-ன் சொந்த மாநிலத்தில் மட்டும், சுமார் 300 பள்ளிகளில் 0% சேர்க்கை நடந்துள்ளது அம்பலமாகியுள்ளது.

இந்திய அளவில் தமிழ்நாட்டின் பள்ளி மாணவர்கள் சேர்க்கையும், கல்லூரி சேர்க்கையும் புது உச்சம் தொட்டு வரும் வேளையில், பா.ஜ.க ஆளும் மாநிலத்தில் வெளியாகியிருக்கிற இச்செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து, மத்தியப் பிரதேச காங்கிரஸ் தலைவர் பூபேந்திர குப்தா, “அண்மை தகவலறிக்கைகள், மத்தியப் பிரதேசத்தில் கல்வி நிலை எந்த அளவிற்கு பின் தங்கியுள்ளது என்பதை உணர்த்தியுள்ளது. சுமார் 20 ஆண்டுகளாக பா.ஜ.க, மத்தியப் பிரதேசத்தில் ஆட்சி செய்து வருகிறது. ஆனால், முன்னேற்றம் என்பது எட்டாக்கனியாகவே நீடிக்கிறது” என கண்டனம் தெரிவித்துள்ளார்.

Also Read: கோரிக்கை வைத்த 36 மணி நேரத்தில் அறிவிப்பு... முதலமைச்சருக்கு உருக்கமாக நன்றி தெரிவித்த எஸ்.பி.பி சரண்!