India

“பாலுறவைப் பற்றி விவாதிப்பது ஒழுக்கக்கேடானதா?” - உச்ச நீதிமன்றம் கூறியது என்ன?

இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளில் தொழிற்கல்வி முறைக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை, பாலியல் கல்வி முறைக்கு கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக முன்வைக்கப்படுகிறது. செல்போன் வசதி இணைய வசதி பெருகியுள்ள இந்த சூழலில் பாலியல் முறை பற்றி போதிய புரிதல் இல்லாமல் இன்றைய இளைஞர்கள் இருப்பதை கண்கூடாக பார்க்க முடிகிறது.

கல்வி நிலையங்கள் தொடங்கி, நீதிமன்றங்கள் வரையிலும் சில நேரங்களில் பாலியல் புரிதல் இன்றி தவறான கருத்துகள் விதைக்கப்படுகிறது. நீண்ட காலமாகவே ஆபாச படங்கள் பார்ப்பது குற்றமா அல்லது குற்றமில்லையா என்ற விவாதங்கள் நடந்து வருகிறது.

காலச்சாரம் என்பது காலம் தோறும் மாறும் தன்மைக் கொண்டவை. அப்படி இருக்கையில் இன்றைய சமூகத்தின் கலாச்சாரத்தில் பாலியல் ரீதியான பாடங்கள் பார்ப்பது ஒரு அங்கமாக இருப்பதை புரிந்துகொள்ள வேண்டும் என பாலியல் மருத்துவ நிபுணர் நாராயண ரெட்டி என்பவர் கடந்த 2015 ஆம் ஆண்டு பிபிசி-க்கு அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், பாலியல் காணொளிகள், புத்தகங்கள், படங்கள் உள்ளிட்டவற்றைப் பார்ப்பது இயல்பான நடவடிக்கைகளே. இது மனநோயோ அல்லது வக்கிர நடவடிக்கையோ அல்ல என்கிறார். அதுமட்டுமல்லாது, பாலியல் படங்கள் பார்ப்பதால் மிகப்பெரிய தவறு எதுவும் நடப்பதில்லை. அதேபோல் பாலியல் படங்களை ஒட்டுமொத்தமாக ஆபாச படங்கள் என்று கூறுவது தவறானது. பாலியல் படங்கள் பார்ப்பதால் கிளர்ச்சியுறுகிறார்களே தவிர குற்றம் செய்கிறார்கள் என்று அறிவியல் ரீதியான ஆய்வுகளில் தரவுகள் இல்லை என்கிறார்.

பாலியல் படங்களில் உள்ள தவறான கருத்துகளால் இளைஞர்கள் பெருமளவு பாதிக்கிறார்கள் என்ற கருத்தும் உள்ளது எனக் கூறப்படுகிறது. பாலியல் படங்களில் சிலவற்றைக் கட்டாயம் பார்க்ககூடாது என்று அரசே தடை விதித்துள்ளது. பதின்பருவத்தினர் இதனால் தவறான திசைக்கு செல்ல நேரிடும் என்பதாலேயே தடை விதிக்கப்பட்டுள்ளது. அப்படி இருக்கையில் சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அளித்த தீர்ப்பு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த 28 வயது இளைஞர் ஒருவர் தனது மொபைல் போனில் குழந்தைகளின் ஆபாசப் படங்களை பதிவிறக்கம் செய்து பார்த்ததாக, அவர் மீது அம்பத்தூர் போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி அந்த இளைஞர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கடந்தாண்டு பிறப்பித்திருந்த உத்தரவில், மனுதாரர் தனது மொபைல் போனில் ஆபாச படங்களைப் பார்த்ததாக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆபாச படங்களைப் பார்த்ததை மனுதாரரும் ஒப்புக் கொண்டுள்ளார். ஆபாச வீடியோக்கள் பார்க்கும் பழக்கத்துக்கு அடிமையாகி விட்டதாகவும், அதில் இருந்து மீள உளவியல் ரீதியிலான சிகிச்சைக்கு செல்ல விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். பொதுவாக மொபைல் போனில் ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து தனிப்பட்ட முறையில் பார்ப்பது குற்றம் இல்லை என்பதால் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் குற்றம் சாட்ட முடியாது. கேரள உயர் நீதிமன்றமும் ஆபாச படங்கள், வீடியோக்கள் பார்ப்பது தவறு இல்லை என தீர்ப்பளித்துள்ளது.

குறிப்பாக 12 முதல்17 வயதுக்குள்ளான பதின்வயதினர் ஆபாச படங்களை பார்க்கும் பழக்கத்துக்கு அதிகளவில் அடிமையாகி உள்ளதாக ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. இதனால், இவர்கள் உடல் அளவிலும், மனதளவிலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை உளவியல் ரீதியான ஆலோசனைகள் மற்றும் வாழ்வியல் நெறிசார்ந்த கல்வி மூலமாக மீட்க வேண்டும் என உத்தரவிட்டு இருந்தார்.

சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து குழந்தைகள் உரிமைக்கான கூட்டணி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

உச்ச நீதிமன்றம்

அப்போது சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு பல மாதங்களாக விசாரிக்கப்பட்டு வந்துள்ளது. இதுபோல பேசிய நீதிபதியின் கருத்தை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. ஒரு நீதிபதியால் எப்படி இவ்வாறு கருத்து கூட முடிகிறது? இது மிகவும் கொடுமையானது என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் கடந்த ஏப்ரல் மாதம் நடந்த விசாரணையில் தெரிவித்திருந்தார். அதன்பிறகு அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கியது உச்ச நீதிமன்றம்.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் மற்றும் நீதிபதி ஜே.பி. பார்திவாலா அடங்கிய அமர்வு அளித்த தீர்ப்பில், சிறார் ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்வது பார்ப்பது போக்சோ மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் குற்றமாகும். இதுபோன்ற செயல்பாடுகள் குழந்தைகளுக்கு எதிரான குற்றச் செயல்களை ஊக்குவிக்கும்.

எனவே குழந்தைகளின் ஆபாச படங்களை தனிப்பட்ட முறையில் பார்ப்பது குற்றமல்ல என்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தீர்ப்பை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உயர் நீதிமன்றம் இந்த விவகாரத்தில் தவறான தீர்ப்பை வழங்கி மிகப் பெரிய தவறு செய்துவிட்டது. உயர்நீதிமன்றம் நீக்கிய வழக்கு விசாரணையை, அமர்வு நீதிமன்றம் மீண்டும் தொடங்க அனுமதி அளிக்கிறோம்.

மேலும் குழந்தைகள் ஆபாச படங்களை தவிர்க்கும் வகையில் ஒன்றிய அரசு அவசர சட்டம் கொண்டு வரவேண்டும். மேலும் தீங்கு விளைவிக்கும் பாலியல் நடத்தைகளைத் தடுக்கவும், உறவுகளுக்கு மரியாதைக்குரிய அணுகுமுறையை வளர்க்கவும், வயதுக்கு ஏற்ற பாலியல் கல்வியை செயல்படுத்தவும் ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதுமட்டுமல்லாது, இனிமேல் Child pornography என்ற வார்த்தையை பயன்படுத்தக்கூடாது. அதற்கு பதிலாக Child Sexual and Exploitative and Abuse Material - CSEAM ‘குழந்தைகள் பாலியல் வல்லுணர்வு மற்றும் சுரண்டல்’ என்ற வார்த்தையை பயன்படுத்த வேண்டும்.

இந்த தீர்ப்பு, CSEAM வைத்திருப்பவர்களைக் கண்டறிவதற்கான குற்றவியல் வழிமுறையை எளிதாக்கும். அதுமட்டுமல்லாது இத்தீர்ப்பு சட்டக் கட்டமைப்பைக் குறிப்பிடுவது மட்டுமல்லாமல், இந்தியாவிற்குள் விரிவான பாலியல் கல்வியின் அவசரத் தேவையை வலியுறுத்துகிறது.

பாலியல் கல்வி என்பது இந்திய பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்துடன் ஒத்துப்போகாது என்ற கருத்து மேலோக்கி இருக்கிறது. பெற்றோர், கல்வியாளர்கள் உட்பட பலரும் பாலுறவைப் பற்றி விவாதிப்பது ஒழுக்கக்கேடானது அல்லது சங்கடமானது என்று பழமைவாதக் கருத்துக்களைக் கொண்டுள்ளனர். இந்த சமூக இழிவால், பாலியல் பற்றி வெளிப்படையாகப் பேசத் தயக்கத்தை உருவாக்குகிறது.

இது இளம் பருவத்தினரிடையே குறிப்பிட்டத்தக்க அறிவு இடைவெளியை ஏற்படுத்துகிறது. இது போன்ற எதிர்ப்புகள் பாலியல் புரிதலை ஏற்படுத்தும் திட்டங்கள் செயல்படுத்துவதை தடுப்பதால் தான் பதின்வயதினர் இணையத்தின் பக்கம் திரும்புகின்றனர். அங்கு கண்காணிக்கப்பட்டாத, ஆரோக்கியமற்ற ஒரு பாலியல் புரிதலே அங்கு அவர்களுக்கு கிடைக்கிறது. இது அவர்களை பாதிக்கிறது என உச்ச நீதிமன்ற அமர்வு தெரிவித்துள்ளது.

Also Read: பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற கொடூரர்... 6 வயது சிறுமியை காப்பாற்றிய குரங்கு கூட்டம் !