India

45ஆவது செஸ் ஒலிம்பியாட் தொடர்! : இந்தியா தங்கம் வென்று சாதனை!

இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் தொடரில், உலக நாடுகளை அடையாளப்படுத்தி தலைசிறந்த செஸ் வீரர்கள் பங்கேற்று வருகின்றனர்.

1924ஆம் ஆண்டு கோடைக்கால ஒலிம்பிக் தொடர் நடந்து கொண்டிருக்கும் போது தான், முதலாவது அதிகாரப்பூர்வ செஸ் ஒலிம்பியாட் பாரிஸில் நடைபெற்றது.

இதன் தொடர்ச்சி, இரண்டாம் உலகப்போரால் தடைப்பட்டது என்றாலும், 1950ஆம் ஆண்டு முதல் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தவறாமல் செஸ் ஒலிம்பியாட் நடத்தப்பட்டு வருகிறது. இதனை பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு (FIDE) நடத்தி வருகிறது.

இடையில் கொரோனா பெருந்தொற்று ஏற்பட்ட சூழலில் மட்டும், 2020ஆம் ஆண்டிற்கு மாற்றாக 2021ஆம் ஆண்டு செஸ் ஒலிம்பியாட் நடத்தப்பட்டது. 2022ஆம் ஆண்டு 44ஆவது செஸ் ஒலிம்பியாட்டை இந்தியா சார்பில் தமிழ்நாடு அரசு தலைமையேற்று சென்னையில் பிரம்மாண்டமாக நடத்தியது.

இதனால், உலகத்தின் பார்வை, தமிழ்நாட்டின் மீது விழுந்தது. இத்தொடரில் தமிழ்நாட்டின் செஸ் வீரர்களும், தங்களின் திறமையை உலக அரங்கில் முன்னிறுத்தினர்.

இந்நிலையில், 2024ஆம் ஆண்டிற்கான 45ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி, ஹங்கேரியில் நடைபெற்றது. இத்தொடரின் தொடக்கத்திலிருந்தே முன்னிலை வகித்த இந்திய அணி, வரலாற்றில் முதன்முறையாக தங்கம் வென்று புதிய சாதனை படைத்துள்ளது.

இந்திய ஆடவர் அணி, இந்திய பெண்கள் அணி என இரு அணிகளும் சிறப்பாக விளையாடி, இரு தங்கம் வென்றது, இந்தியாவிற்கு கூடுதல் சிறப்பைத் தேடித்தந்துள்ளது.

Also Read: “மோடி வெளிநாடுகளில் மட்டுமே இருக்கிறார் - இந்தியாவில் இருப்பது குறைவு தான்” : தயாநிதிமாறன் குற்றச்சாட்டு!