India

மோடி பிறந்தநாளிலும் மோசடி... அம்பலமான உ.பி. பாஜக மேயர் செய்த தில்லாலங்கடி வேலை - வீடியோ !

பிரதமர் நரேந்திர மோடியின் 74-வது பிறந்தநாள் கடந்த செப்.17-ம் தேதி கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு பாஜகவினர், பாஜக தலைவர்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்தனர். தொடர்ந்து மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு பாஜகவினர் நாடு முழுவதும் ஒரு சில இடங்களில் இரத்ததானம் முகாம் ஏற்பாடு செய்திருந்தனர்.

அந்த வகையில் பாஜக ஆளும் உத்தர பிரதேசத்தின் மொராதாபாத் பகுதியில் பாஜக இளைஞரணி சார்பில் இரத்ததான முகாம் நடைபெற்றது. இதில் சில பாஜக ஆதரவாளர்கள், நிர்வாகிகள் என கலந்துகொண்டு இரத்ததானம் செய்ததாக கூறப்படுகிறது. அதன்படி அங்கு வந்த மொராதாபாத் பாஜக மேயர் வினோத் அகர்வால் (Vinod Agarwal) தானும் இரத்ததானம் கொடுப்பதாக கூறி, படுக்கையில் படுத்துள்ளார்.

பின்னர் வினோத் அகர்வால், இரத்ததானம் கொடுப்பது போல் அவரது வலது கையில் ஊசி வைத்து இரத்தத்தை உறிஞ்சுவது போல் ஃபோட்டோ எடுத்துள்ளார். மேலும் வழக்கமாக இரத்ததானம் கொடுப்பவர்கள் கையில் வைத்திருக்கும் பந்தையும் தனது கையில் வினோத் அகர்வால் வைத்திருந்தார். எனவே மொத்தமாக தானும் இரத்ததானம் கொடுப்பதுபோல் போஸ் கொடுத்து விதவிதமாக ஃபோட்டோ எடுத்துக்கொண்டுள்ளார்.

இந்த நிலையில், பாஜக மேயர் வினோத், இரத்ததானம் கொடுப்பது போல் நடித்துள்ளது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், வினோத் ஃபோட்டோ எடுத்துக்கொண்ட பிறகு, தனது கையில் இருந்த பேண்டேஜை எடுக்கிறார். அதில் ஒன்றும் இல்லை என்பது தெளிவாக பதிவாகியுள்ளது. எல்லாவற்றிலும் போலியாக மோசடி செய்து வரும் பாஜகவினர் இதிலும் மோசடி செய்துள்ளதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இரத்ததானம் கொடுப்பதாக போலியாக செட்-அப் செய்து விதவிதமாக ஃபோட்டோ எடுத்துக்கொண்ட வினோத் அகர்வாலுக்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது. மேலும் இந்த வீடியோ இணையத்தில் பலர் மத்தியிலும் பல்வேறு கருத்துகளை பெற்று வருவதோடு, கவுண்டமணி பாணியில் “என்ன நடிப்புடா சாமி...” என்று பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Also Read: 4 ஆவதாகவும் பெண் குழந்தை : தந்தை செய்த கொடூர செயல் - உ.பி.யில் அதிர்ச்சி!