India

"தலித் மக்களை ஒடுக்கும் NDA கூட்டணி" : வீடுகள் எரிக்கப்பட்ட சம்பவத்திற்கு ராகுல் காந்தி கண்டனம்!

பீகார் மாநிலம் நவாடா மாவட்டம், தாதூர் கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட தலித் வீடுகளை மர்ம நபர்கள் தீவைத்து எரித்துள்ளனர். இதில் முற்றிலுமாக வீடுகள் எரிந்து நாசமாகியுள்ளது.மேலும் வீடுகளில் இருந்த அனைத்து பொருட்களும் தீயில் எரிந்துள்ளது. அதோடு துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் தீயில் சிக்கி பலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்துள்ளனர். இந்த கொடூர சம்பவம் குறித்து போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த தாக்குதல் சம்பவத்திற்கு எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், ”பீகார் மாநிலம் நவடா பகுதியில் தலித்துகளுக்கு சொந்தமான 80க்கும் மேற்பட்ட வீடுகள் எரித்து நாசமாக்கப்பட்டிருக்கிறது. உடை, தங்கும் இடம் எதுவும் இல்லாமல் தலித் மக்கள் அந்த பகுதியில் பரிதவிக்கின்றனர். இந்த கொடூர சம்பவத்தை பார்த்த பிறகும் பிரதமர் மௌனமாக இருக்கிறார்.

இவர்களின் அமைதி தான் இதுபோன்ற சம்பவங்களுக்கு உந்துதலாக இருக்கிறது. மாநில அரசும், காவல்துறையும் இந்த வெட்கக்கேடான குற்றத்தின் அனைத்து குற்றவாளிகள் மீதும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மறுவாழ்வு அளித்து அவர்களுக்கு நிதியுதவிகளை அரசாங்கங்கள் வழங்க வேண்டும்.” என தெரிவித்துள்ளார்.

Also Read: 100க்கும் மேற்பட்ட தலித் வீடுகள் தீ வைத்து எரிப்பு : பா.ஜ.க கூட்டணி அரசின் காட்டு தர்பார்!