India

நிர்வாணமாக மீட்கப்பட்ட பெண்ணின் சடலம் : உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி - பிரியங்கா காந்தி ஆவேசம்!

உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் தலையில்லாத பெண்ணின் நிர்வாண சடலம் கண்டெடுக்கப்பட்டது. இது குறித்து போலிஸார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறார்கள். தலையில்லாததால் அப்பெண் யார் என்பதில் அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, பெண் ஒருவர் தேசிய நெடுஞ்சாலையில் நடந்து செல்லும் காட்சி பதிவாகியுள்ளது. அது உயிரிழந்த பெண்தானா? என போலிஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டு உடலை சாலையில் வீசி சென்று இருக்கலாம் என்ற புகாரும் எழுந்துள்ளது. இச்சம்பவம் நடந்து 24 மணி நேரத்திற்கு மேல் ஆகியும் இதுவரை ஒரு துப்புக்கூட போலிஸாருக்கு கிடைக்கவில்லை.

இந்நிலையில், பா.ஜ.க ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வேதனையுடன் கூறியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், “பாஜக ஆளும் உ.பி-யில் பெண்ணின் நிர்வாண சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவங்கள் இதயத்தை உலுக்குகிறது. இதுபோன்ற கொடூரச் செயல்களால் பெண்களின் மனவுறுதி உடைந்து வருகிறது.

நாட்டில் ஒவ்வொரு நாளும் 86 பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு பலியாகின்றனர் பெண்கள் பாதுகாப்பு பற்றி பிரதமர் மோடி பெரிதாக பேசுகிறார். ஆனால் பெண்கள் தங்கள் பாதுகாப்பிற்காக காத்திருக்கிறார்கள். இந்தக் காத்திருப்பு எப்போது முடிவுக்கு வரும்?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

Also Read: ம.பி.யில் இராணுவ வீரர்கள் மீது தாக்குதல் - பெண் தோழி மீது கூட்டு பாலியல் வன்முறை : ராகுல் காந்தி கண்டனம்!