India

”மாதபி புச் மீது ஊழல் தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிய வேண்டும்” : மஹுவா மொய்த்ரா MP வலியுறுத்தல்!

அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் (Hindenburg) என்ற ஆய்வு நிறுவனம், அதானி குழுமத்தின் பங்குகளில் பல குளறுபடிகள் உள்ளதை கடந்த ஆண்டு வெளிப்படுத்தியது. அதனைத் தொடர்ந்து அதானி நிறுவனங்களின் பங்குகள் கடும் சரிவை சந்தித்தது.

இந்த முறைகேடு குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்தவேண்டும் என நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் கோரிக்கை விடுத்தனர். ஆனால், இது குறித்து SEBI அமைப்பு விசாரணை நடத்தும் என ஒன்றிய பாஜக அரசு அறிவித்தது.

தொடர்ந்து இதுகுறித்து உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்ட நிலையில், இந்த விவகாரத்தை SEBI விசாரணையே போதுமானது என்று நீதிபதிகள் தெரிவித்தனர். இதனிடையே அதானி ஊழலில் SEBI தலைவர் மாதபி புச்க்கும் பங்கு உள்ளதாக அதிர்ச்சிகரமான குற்றச்சாட்டுகளை ஹிண்டன்பர்க் முன்வைத்தது.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் SEBI அமைப்பின் தலைவராக அரசு ஊதியம் பெற்று வரும் மாதபி புச், தனியார் வங்கியான ஐசிஐசிஐ-லும் ஊதியம் பெற்றுள்ளார் என்றும், ஐசிஐசிஐ வங்கியிடம் இருந்து அவர் ரூ.16.80 கோடி ஊதியமாகப் பெற்றுள்ளார் என்றும் குற்றச்சாட்டு எழுந்தது

இப்படி அடுக்கடுக்காக புகார்கள் எழுந்து வரும் நிலையில் மாதபி பூரி புச் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் ஒன்றிய அரசு அமைதியாக இருந்து வருகிறது.

இந்நிலையில், செபி தலைவர் மாதபி பூரி புச் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என லோக்பால் அமைப்பிடம் திருணாமுல் காங்கிரஸ் MP மஹுவா மொய்த்ரா புகார் அளித்துள்ளார்.

அதில்,”9.5 கோடி இந்தியர்கள் பங்குத் சந்தையில் முதலீடு செய்துள்ளனர். பொதுமக்களின் நம்பிக்கையை சிதைக்கும் வகையில் செபி தலைவரின் செயல்பாடு உள்ளது. முறையற்ற தொடர்புகளை அமைத்துக் கொண்டு பல வகைகளில் பலனடையும் நோக்கில் அவர் செயல்பட்டுள்ளார். இது தேச நலனுக்கு எதிரானது. அச்சுறுத்தலாக உள்ளது, எனவே அவர் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.

Also Read: SEBI தலைவர் மாதபி புச் மீது புகார் தெரிவித்த SEBI ஊழியர்கள்... நிதியமைச்சகத்துக்கு கடிதம் !