India

”மணிப்பூரை தீக்கு இரையாக்கிய பிரதமர் மோடி” : ஜெய்ராம் ரமேஷ் கண்டனம்!

மணிப்பூர் மாநிலத்தில் இரு சமூகத்திற்கு இடையே கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக மோதல்போக்கு இருந்து வருகிறது. இதனால் மாநிலம் முழுவதும் வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளது.

நூற்றுக்கணக்கான பெண்கள் பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டும், அப்பாவி குழந்தைகள் நடுத்தெருவிற்கு வந்தும், ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வீடின்றி முகாம்களில் வாழ்க்கை நடத்தும் நிலை இன்று வரை தொடர்கிறது.

கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு கூட முன்னதாக முன்னாள் முதலமைச்சர் மறைந்த மைரெம்பாம் கொய்ரெங் சிங் வீட்டின் மீது ராக்கெட் குண்டு வீசப்பட்டது. இதில் 70 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 5 பேர் காயமடைந்ந்தனர்.

அதேபோல் ஜிரிபாம் மாவட்டத்தில் வன்முறையாளர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது மீண்டும் மணிப்பூரில் வன்முறை அதிகரித்துள்ளது.

மேலும் வன்முறையை கட்டுப்படுத்த தவறிய மாநில பா.ஜ.க அரசை கண்டித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் மீது போலிஸார் துப்பாக்கிச்சூடு நடத்தி போராட்டத்தை ஒடுக்கப்பார்கிறார்கள். இருந்து மாணவர்கள் போராடி வருகிறார்கள்.

இன்று போராட்டக்கார்கள் பிரதமர் மோடியின் பேனர்களை கிழித்து தங்களது எதிர்ப்புகளை மாநில அரசுக்கு எதிராக வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

இந்நிலையில், மணிப்பூரை பிரதமர் மோடி தீக்கு இரையாக்கி விட்டதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், ”மணிப்பூரில் காங்கிரஸ் ஆட்சி செய்த 15 ஆண்டுகளில் செய்யாததை, 15 மாதங்களில் செய்து தருவதாக பிரச்சாரம் செய்த மோடி, ஆட்சியைப் பிடித்த பின் மணிப்பூர் மாநிலத்தையே தீக்கு இரையாக்கியுள்ளார். இன்றும் அந்த தீ எரிந்து கொண்டிருக்கிறது. அதன் வெளிப்பாடகவே, இன்று அவரது பேனர் கிழிக்கப்பட்டுள்ளது.” என தெரிவித்துள்ளார்.

Also Read: ”மணிப்பூருக்காக ஒரு நொடி கூட செலவிடாத பிரதமர் மோடி” : மல்லிகார்ஜூன கார்கே தாக்கு!