India

‘மணிப்பூரில் அமைதி வேண்டும்!’ : பா.ஜ.க.வின் ஆளுமை தோல்வியை கண்டித்து மாணவர்களும், பெண்களும் பேரணி!

மணிப்பூரில் சிறுபான்மையினர்களுக்கு வழங்கப்படும் இடஒதுக்கீடு பெரும்பான்மை சமூகமான மெய்தியினருக்கும் பகிர்ந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டதால், மாநிலத்தில் கலவரம் வெடித்தது.

இதில் குகி, சூமி ஆகிய சிறுபான்மையினத்தை சேர்ந்த மக்கள் பலர் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்து முகாம்களில் வாழும் சூழலுக்கு தள்ளப்பட்டனர். சாலைகளில் பெண்கள் துணியற்று நடக்க வைக்கப்பட்டு, பாலியல் வன்முறைக்கு ஆளாகினர். இதனை, மணிப்பூர் காவல்துறையும் வேடிக்கை பார்த்தது.

இது போன்ற சூழ்நிலையில், கடந்த ஆண்டு கலவரம் தொடங்கிய ஓரிரு மாதங்களில், தான் முதல்வர் பதவியிலிருந்து விலகுவதாக சில நாட்களுக்கு நாடகமாடிய, பா.ஜ.க மூத்த தலைவரும், மணிப்பூர் முதல்வருமான பைரன் சிங், அவரது ஆதரவாளர்களின் பேச்சைக்கேட்டு பதவி விலகும் எண்ணத்தை கைவிட்டதாக தெரிவித்தார். இச்செய்தி, தேசிய அளவில் சர்ச்சை ஆனது.

பைரன் நிகழ்த்திய நாடகம் அரங்கேறியும், மணிப்பூர் கலவரம் தொடங்கியும் ஒன்றரை ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், இயல்புநிலையும், அடிப்படை உரிமையும் மணிப்பூர் மக்களுக்கு எட்டாக்கனியாகவே அமைந்துள்ளது.

இந்நிலையில், மாநிலத்தில் மீண்டும் அட்டூழியங்கள் வலுக்கத்தொடங்கியுள்ளன. இதனால், அமைதி நிலையை மீட்டுத்தர தவறும் பா.ஜ.க ஆட்சியை எதிர்த்தும், அமைதி வேண்டும் என்ற கோரிக்கையை வலுயுறுத்திம் மணிப்பூர் மாணவர்களும், பெண்களும் போராட்டக்களத்தில் இறங்கியுள்ளனர்.

“கடந்த ஆண்டு, பைரன் நிகழ்த்திய நாடகம் உண்மையில் நிகழ வேண்டும், முதல்வர் பதவி விலக வேண்டும்” என்ற முழக்கங்களும், மணிப்பூரில் வலுக்கத்தொடங்கியுள்ளன.

எனினும், ராஜ்பவன் செல்வதையும், மாநில சட்டப்பேரவை உறுப்பினர்களை அழைத்துப் பேசுவதையும் மட்டுமே செய்து வரும் மணிப்பூர் முதல்வர் பைரன். கலவரத்தை முழுமையாக முடித்து, அமைதியை நிலைநாட்ட தவறி வருகிறார்.

என்ன நடந்தாலும், ஆட்சியை தக்க வைப்பதே முதன்மை நோக்கம் என்ற எண்ணத்துடன் பைரன் சிங் செயலாற்றி வருவது, அண்மையில் வெளியான மணிப்பூர் டேப்பின் (Manipur Tape) வழி அம்பலப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read: ஜம்மு காஷ்மீர் தேர்தல் : பா.ஜ.கவுக்கு அதிர்ச்சி கொடுத்த காஷ்மீர் பண்டிட்டுகள்!