India

“CBSEஐ விட சிறந்தது தமிழ்நாடு அரசின் பாடத்திட்டம்!” : ஆளுநரின் சர்ச்சை பேச்சிற்கு அமைச்சர்கள் பதிலடி!

சமூக சம உரிமையின் அடிப்படையில் அனைவருக்கும் கல்வி என பாலின பாகுபாடு, வகுப்புவாதம் உள்ளிட்ட பிரிவினைகள் இல்லா சமூகநீதி பகிரும் கல்வியை வழங்குகிற மாநில அரசாக தமிழ்நாடு அரசு திகழ்கிறது.

அதன் படி, இந்தியாவின் மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டின் கல்வி விகிதம் பல மடங்கு உயர்ந்திருக்கிறது. கல்வி சேர்க்கையில், தேசிய சராசரியும் தமிழ்நாட்டின் சராசரியை விட பின் தங்கியே இருக்கிறது.

கல்வி பெற்ற இளைஞர் சமூகத்தை, நல்ல பணிகளில் ஈடுபடுத்தும் நடவடிக்கைகளையும், “நான் முதல்வன்” உள்ளிட்ட திட்டங்கள் வழி, செயலாற்றி வருகிறது தமிழ்நாடு அரசு.

எனினும், தமிழ்நாடு அரசையும், தமிழ்நாட்டின் பெருமையையும் தொடர்ந்து சீர்குலைக்க எண்ணும் நோக்கில், கடந்த மூன்றாண்டுகளாக இயங்கி வரும் ஆளுநர் ஆர்.என்.ரவி, தற்போது மற்றொரு வெறுப்பை உமிழ்ந்துள்ளார்.

மாநிலக்கல்வியை, தேசிய கல்வியுடன் தொடர்பு படுத்து, தமிழ்நாட்டின் பாடத்திட்டத்தை தரக்குறைவாக பேசியுள்ளார். அதற்கான தக்க பதிலடியை, இன்று (செப்டம்பர் 2) தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியும், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியும் தந்துள்ளனர்.

அமைச்சர் பொன்முடி பேசுகையில், “2006ஆம் ஆண்டிலேயே சமச்சீர் கல்வி கொண்டுவந்தது திராவிட மாடல் அரசு. பள்ளிக்கல்வியில் மட்டுமல்லாமல், உயர்கல்வியிலும் தேசிய அளவில் தமிழ்நாடு தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது.

இந்தியாவின் முன்னணி விண்வெளி ஆய்வாளர் வீரமுத்துவேல் உள்ளிட்டு இன்று உலகை ஆளும் பலர், தமிழ்நாடு அரசின் மாநிலக் கல்வியை பயின்றவர்கள் தான். உலகத்தரமுடிய நம் மாநிலக் கல்வி, CBSEஐ விடவும் சிறந்தது. அவ்வகையில், தேசிய கல்விக் கொள்கையை ஒருபோதும் நாங்கள் ஏற்க மாட்டோம்” என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசுகையில், “அரசு தேர்வுக்கு தயாராகும் மாணவர்களே மாநில பாடத்திட்டத்தை பாராட்டுகின்றனர். எனினும், ஆளுநர் தமிழ்நாட்டின் கல்வித்தரம் குறித்து ஆய்வு செய்ய விரும்பினால், அவரை எங்கும் அழைத்து சென்று நிரூபிக்கத் தயார்” என சவால் விடுத்துள்ளார்.

Also Read: ”இந்திய விளையாட்டுத்துறை வளர்ச்சியின் முன்னோடி தமிழ்நாடு” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!