India
சந்திரயான் 3 : ஆகஸ்ட் 23 ஆம் தேதி தேசிய விண்வெளி தினமாக அறிவிப்பு!
நிலவின் தென் துருவத்தில் சந்திரயான் 3 விண்கலத்தை இஸ்ரோ வெற்றிகரமாக நிலைநிறுத்திய ஆகஸ்ட் 23, அதிகாரப்பூர்வமாக தேசிய விண்வெளி தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் முதல் தேசிய விண்வெளி தினம் நாடு முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது.
சந்திரயான் 2ல் தோல்வி கண்டாலும், அதிலிருந்து கற்ற பாடத்தை வைத்து சந்திரயான் 3 விண்கலத்தை நிலவுக்கு அனுப்பி, அமெரிக்கா, ரஷ்யா, சீன நாடுகளுக்கு பிறகு நிலவில் கால்பதித்த 4வது நாடு, இதுவரை யாரும் கண்டிராத நிலவின் தென் துருவத்தில் கால் பதித்த முதல் நாடு என்ற இரண்டு சாதனையை படைத்தது இந்தியா.
ஆகஸ்ட் 23, 2023ல் நிலவின் தென் துருவத்தில் விக்ரம் லேண்டர் தரையிறங்கியது. அதிலிருந்து வெளியேறிய பிரக்யான் ரோவர் 14நாட்கள் ஆய்வு மேற்கொண்டு அதன் பிறகு உறக்க நிலைக்கு சென்றது. அத்துடன், நிலவில் விக்ரம் லேண்டர் கால் பதித்த இடத்திற்கு சிவ சக்தி பாயிண்ட் எனவும் பெயர் வைக்கப்பட்டுள்ளது.
14 நாட்கள் நிலவின் தென் துருவத்தில் ஆய்வு செய்த பிரக்யான் ரோவர், நிலவில் சல்பர் இருப்பது உள்ளிட்ட ஆய்வுக்கூறுகளையும் சேகரித்தது. நிலவில் இரவு நேரத்தில் மைனஸ் 200 டிகிரிக்கும் அதிகமாக குளிர் இருக்கும் என்பதால் உறக்க நிலைக்கு சென்ற ரோவரை மீண்டும் எழுப்ப முடியாமல் போனது.
இஸ்ரோவின் இந்த சாதனை விண்வெளித்துறையில் இந்தியாவுக்கு என தனி அடையாளத்தை ஏற்படுத்தியது. இந்த சாதனை ஓராண்டு நிறைவு செய்துள்ள நிலையில், சந்திரயான் 3-க்கு வரலாற்று சிறப்பு மிக்க விண்வெளி விருதும் வழங்கப்பட்டுள்ளது.
சந்திரயான் 3இன் சாதனை பயணத்தையடுத்து, அடுத்தடுத்து விண்கலன்களையும் வெற்றிகரமாக செலுத்தி வருகிறது இஸ்ரோ. சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா எல் 1 விண்கலத்தை விண்ணுக்கு செலுத்தியுள்ள இஸ்ரோ, தனது கனவு கலனை அனுப்புவதற்கான முழு முயற்சியில் இறங்கியுள்ளது.
இஸ்ரோவின் மிக முக்கிய மைல்கல்லான விண்ணுக்கு மனிதனை அனுப்பும் ககன்யான் திட்டம் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. வரும் டிசம்பரில் வயோம்மித்ரா என்ற ரோபோட்-யை அனுப்பி சோதனை பார்க்க உள்ள இஸ்ரோ, அனைத்தும் 100% தயாரான பின் 4 வீரர்களை தாங்கி கொண்டு 2025ல் ககன்யான் விண்கலம் விண்ணுக்கு செல்லும் படி திட்டமிட்டுள்ளது.
இந்த திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டால், அமெரிக்கா, ரஷ்யா, சீன நாடுகளுக்கு அடுத்தபடியாக, விண்ணுக்கு மனிதனை அனுப்பிய 4வது நாடு என்ற புதிய பெருமையையும் இந்தியா படைக்கும் என்பதால், ககன்யான் இஸ்ரோவின் கனவுத்திட்டமாக இருக்கின்றது.
ராக்கெட்டை சைக்கிளில் வைத்து தள்ளிக்கொண்டு போன காலம் போய், விண்வெளி துறையில் உலக நாடுகள் மீதான பார்வையை தன்மீது இந்தியா திருப்பியுள்ளது என்றால் அது மிகையல்ல.
Also Read
-
”2026 தேர்தலிலும் திமுகவே வெல்லும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!
-
”நம்பிக்கையுடன் இருங்கள்” : கோரிக்கை வைத்த சில மணி நேரத்திலேயே ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!