India

”இந்தியா வரலாற்றில் இருந்து நேருவை அகற்ற முடியாது” : குடியரசு தலைவர் உரைக்கு காங்கிரஸ் கண்டனம்!

78 ஆவது சுதந்திர தின விழா நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றிவைத்து உரையாற்றினார். அதேபோல் சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசியக்கொடியை ஏற்றிவைத்தார். நாடே சுதந்திர தினத்தில், விடுதலைக்காக போராடிய தியாகிகளை நினைவு கூர்ந்து அவர்களை போற்றி வருகிறது.

முன்னதாக நேற்று குடியரசு தலைவர் திரவுபதி முர்மு சுதந்திர தின உரையாற்றினார். அப்போது மகாத்மா காந்தி, சர்தார் படேல், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், பாபா சாஹேப், அம்பேத்கர், பகத் சிங், சந்திர சேகர் ஆசாத் என விடுதலை போராட்டத்தில் பங்கேற்ற எண்ணற்ற தலைவர்களின் பெயரை பட்டியலிட்டார்.

ஆனால், இந்திய விடுதலை போராட்டத்தில் முக்கிய பங்காற்றிய ஜவஹர்லால் நேருவை பெயரை குடியரசு தலைவர் தவிர்த்து விட்டார். குறிப்பாக பிரதமர் மோடி முதல் பா.ஜ.க தலைவர்கள் பலரும் விடுதலை போராட்டம் குறித்து பேசும் போது திட்டமிட்டே நேருவின் பெயரை தவிர்த்து வருகிறார்கள்.

இந்நிலையில் ஜவஹர்லால் நேருவின் பெயரை தவிர்த்த குடியரசு தலைவர் உரைக்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், ”1947 ஆகஸ்ட் 14 நள்ளிரவில் சுதந்திரத்தை இந்தியாவுக்கு அறிவித்தார் ஜவஹர்லால் நேரு. ‘இந்திய மக்களின் முதல் சேவகன் நான்’ என அவர் ஆகஸ்ட் 15, 1947 அன்று ரேடியோவில் பேசினார்.

ஆனால் சுதந்திரப் போராட்ட இயக்கத்தின் பல தலைவர்கள் இடம்பெற்றிருந்த நேற்றைய ஜனாதிபதி உரையில் நேருவின் பெயர் இடம்பெறவில்லை. இந்திய வரலாற்றிலிருந்து நேருவை அகற்ற முயற்சிக்கும் இத்தகைய செயல்கள் பலனளிக்காது.” என தெரிவித்துள்ளார்.

Also Read: ”இந்திய மீனவர்களை மீட்கும் தைரியம் மோடிக்கு இல்லையா?” : முரசொலி சரமாரி கேள்வி!