India
மீண்டும் புயலைக் கிளப்பிய ஹிண்டன்பர்க் : மோடி - அதானி - செபி தலைவரின் மோசடிகள் அம்பலம் ; முழு விவரம்!
இந்தியாவில் கடந்த 2014ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசு, 3வது முறையாக தனது ஆட்சியை தொடர்ந்து வருகிறது. அதானி, அம்பானி போன்ற கார்ப்பரேட் முதலாளிகளுக்கு சேவகம் செய்வதையே தனது ஆட்சியின் இலக்காக கொண்டு கடந்த 10 ஆண்டுகளும் கார்ப்பரேட்டுகளுக்கு மட்டுமே உழைத்தது ஒன்றிய பாஜக அரசு. இந்திய பொருளாதாரம் கடும் சரிவை சந்தித்தாலும் தனது கார்ப்பரேட் நண்பரான அதானிக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வண்ணம் பார்த்துக்கொண்ட பங்கு பிரதமர் மோடிக்கு உண்டு.
அதானிக்கு மோடி செய்த உதவிகள் என்பது கொஞ்சம் நஞ்சம் அல்ல. குறிப்பாக கடந்த முறை, அதானி பங்குச் சந்தை மோசடி விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி பேசியதற்காகவே அவரது எம்.பி பதவியை பறித்து, தங்களின் விசுவாசத்தை காட்டினார் பிரதமர் மோடி. அதானியால் உலக நாடுகள் மத்தியில் இந்தியா தலைகுனிந்தாலும் பரவில்லை; அதானியை காப்பாற்றுவோம் என செயல்படுகிறார்கள் ஒன்றிய அமைச்சர்கள்.
நீங்களே எண்ணிப் பாருங்கள்... கடந்த 2014ஆம் ஆண்டு 8 பில்லியன் டாலராக இருந்த அதானியின் சொத்து மதிப்பு இப்போது 140 பில்லியன். 2014 ஆம் ஆண்டு உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 609 ஆவது இடத்தில் இருந்தவர் 2022 ஆம் ஆண்டு இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார்.
அதுமட்டுமல்ல, விமான நிலையங்கள் எல்லாம் அதானிக்கு மாறுகிறது. இதுவரை அதானிக்கு 6 விமான நிலையங்கள் தரப்பட்டன. துறைமுகம் என்றாலும் அதானிக்குதான் செல்கிறது. இந்தியாவில் உள்ள பெரும்பாலன மாநிலங்களில் அதானியின் தொழில் நஷ்டமே இல்லாமல் செல்கிறது; அவர் எந்தத் தொழிலைத் தொடங்கினாலும் நஷ்டம் அடைவது இல்லை. அதற்கு முழு காரணம் மோடி ஒருவரே!
இந்தியா மட்டுமல்லாது உலக நாடுகளின் அதானி தொழிலை மேம்படுத்தும் வேலையையும் மோடி செய்து வருகிறார். குறிப்பாக, கடந்த ஆட்சியில் மோடி சென்ற வெளிநாட்டு பயணங்களில் இந்தியாவின் பெருளாதாரம் வளர்ந்ததோ இல்லையோ அதானியின் சொத்து மதிப்பு பல மடங்கு வளர்ந்துள்ளது.
உதாரணத்திற்கு சிலவற்றை மட்டும் பட்டியலிடுவோம்... போர் பிரச்சனை தீவிரமடையும் முன்பு பிரதமர் மோடி இஸ்ரேல் சென்றார். உடன் அதானியும் சென்றார். பின்னர் இந்தியா - இஸ்ரேல் இடையே அனைத்து தொழில் துறை ஒப்பந்தமும் அதானிக்கு சென்று விட்டது.
அடுத்ததாக ஆஸ்திரேலியாவுக்கு பிரதமர் மோடி சென்றார். பின்னர் அடுத்த சில நாட்களிலேயே எஸ்.பி.ஐ. வங்கி அதானிக்கு 1 பில்லியன் டாலர் கடன் வழங்குகிறது. வங்க தேசத்து பிரதமர் மோடி சென்றார். சில நாட்களுக்கு பின் வங்கதேசத்தின் மின்வாரியம் 25 ஆண்டுகளுக்கு மின் விநியோக உரிமையை அதானிக்கு வழங்குகிறது. 1500 மெகாவாட் மின்சார ஒப்பந்தம் அதானிக்கு கிடைக்கிறது. பின்னர் இலங்கைக்கு பிரதமர் மோடி சென்றார். பின்னர் காற்றாலை மின்உற்பத்தி உரிமத்தை அதானிக்கு கொடுக்க மோடி அழுத்தம் கொடுத்ததாக ஜூன் 2022-ல் ராஜபட்சே சொன்னார்.
இதற்கிடையில் கடந்த 2023ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், வெளிநாட்டு நிறுவனம் மூலம் அதானி குழும பங்குகளை வாங்கி விற்று 2 பேர் கொள்ளை லாபம் ஈட்டியதாக அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் என்ற அமைப்பு பரபரப்பு அறிக்கையை வெளியிட்டது. அதானி குழுமம், பங்குச்சந்தைகளில் முறைகேட்டில் ஈடுபட்டு பங்குகள் விலையை உயர்த்தியதாக ஹிண்டன்பர்க் அமைப்பு குற்றம் சாட்டியது.
இதனை மூடி மறைக்க ஒன்றிய அரசு முயன்றாலும் தற்போது அதானி மோசடி விவகாரம் பெரும் புயலைக் கிளப்பி வருகிறது. இந்நிலையில் மீண்டும் ஹிண்டன்பர்க் மற்றொரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கை வெளியாகும் என தெரிந்தே, நாடாளுமன்றத்தில் அம்பலமாகிவிடுவோம் என்ற அச்சத்தில், இம்முறை நாடாளுமன்றக் கூட்டத்தொடரை முன்கூட்டியே முடித்து விட்டது ஒன்றிய அரசு.
பங்குச் சந்தை மோசடி விவகாரங்களை விசாரிக்க வேண்டிய அமைப்பு செபி. அந்த அமைப்பின் தலைவராக மாதபி புரி புச் என்பவர் இருக்கிறார். கடந்த முறை நடந்த விவகாரத்தில் செபி அதானி மோசடியை விசாரிக்க தாமதப்படுத்தி வந்தது. இதனால் பல்வேறு குற்றச்சாட்டுகள், சந்தேங்கள் எழுந்தது. இந்நிலையில் ஹிண்டன்பர்க் அறிக்கையில் செபி தலைவர் மாதபி புரி புச்வின் மோசடியும் அம்பலமாகியுள்ளது.
இதுதொடர்பாக ஹிண்டன்பர்க் வெளியிட்ட அறிக்கையில், அதானி குழுமம் தொடர்புடைய வெளிநாட்டு நிறுவனங்களில் செபி தலைவர் மாதபி புரி புச் மற்றும் அவரது கணவர் தவல் புச் தங்கள் பங்குகளை வைத்துள்ளதாக தெரிவித்துள்ளது. அதாவது செபி தலைவராக மாதவி புச் நியமனம் செய்யப்பட்ட 2 வாரங்களுக்குப் பிறகு அவர் தனது பங்குகளை தனது கணவரின் பெயருக்கு மாற்றியுள்ளார்.
அதன் பின்னரும் அவர் தனது தனிப்பட்ட மின்னஞ்சலைப் பயன்படுத்தி தனது கணவரின் பெயரில் வணிகம் செய்தார் என்பதற்கு முக்கிய ஆதாரங்கள் உள்ளது. இது வெளிப்படையாக இரட்டை ஆதாயம் பெறும் விவகாரம் என ஹிண்டன்பர்க் தெரிவித்துள்ளது. மேலும் India Infoline: EM Resurgent Fund மற்றும் India Focus Fund’ நிறுவனம் மூலம் இயக்கப்படும் அதானியின் மற்ற பங்குதாரர் நிறுவனங்களுக்கு எதிராக இதுவரையும் எந்த நடவடிக்கையும் செபி எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளது.
முறைகேடுகளையும் பங்குச்சந்தை ஒழுங்குமுறையையும் கண்காணிக்க வேண்டிய ஒரு அமைப்பின் தலைவரே தனது தனிப்பட்ட ஆதாயத்திற்காக அதானிக்கு உதவியுள்ளதன் மூலம் செபியின் வெளிப்படைத்தன்மை கேள்விக்கு உள்ளாகியுள்ளது. அதனால் அதானி மோசடி குறித்து செபி விசாரணை குறித்து முழுமையாக விசாரணை நடந்த வேண்டும் என ஹிண்டன்பர்க் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளது.
ஆனால் ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டை செபி தலைவர் மாதபி புரி புச் மற்றும் அவரது கணவர் தவல் புச் மறுத்துள்ளனர். ஹிண்டன்பர்க் நிறுவனம், அதானி குழுமத்திற்கு எதிராக கூறிய குற்றச்சாட்டுகள், முறையாக விசாரிக்கப்பட்டன என்று செபி விளக்கம் அளித்துள்ளது.
இந்நிலையில் இந்தியா கூட்டணி கட்சிகள் இதுகுறித்து நாடாளுமன்றக் கூட்டு குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். மேலும் காங்கிரஸ் தனது அறிக்கையில், அதானி பங்குச்சந்தை முறைகேடு குறித்து 2 மாதங்களில் விசாரணையை முடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் 18 மாதங்களாகியும் விசாரணையை செபி முடிக்கவில்லை. பிரதமர் மோடியின் தேர்தல் ஆதாயத்திற்காக செபி பங்குச்சந்தை மோசடி விசாரணையை தாமதப்படுத்தியுள்ளது.
முறைகேட்டில் சிக்கி உள்ள செபி இனிமேலும் அதானி முறைகேடு குறித்து விசாரணை தார்மீக உரிமை இல்லை. அதானிக்கும், செபிக்குக்கும் ஆதரவாக செயல்படும் ஒன்றிய அரசு மீதும் நம்பிக்கை இல்லை. எனவே, உச்சநீதிமன்றம் தனது மேற்பார்வையில் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். செபி தலைவர் மாதவி பூச் உடனடியாக ராஜினாமா செய்து, நாடாளுமன்ற கூட்டு குழு விசாரணைக்கு உத்தரவிட்ட வேண்டும். தெரிவித்துள்ளது.
மேலும் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள X தளப்பதிவில், செபி அமைப்பின் தலைவர் மாதபி புச் ஏன் இன்னும் ராஜினாமா செய்யவில்லை? முதலீட்டாளர்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை இழந்தால் அதற்கு யார் பொறுப்பேற்பார்கள்? பிரதமர் மோடியா, செபி தலைவரா, அல்லது அதானியா? நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு பிரதமர் மோடி ஏன் அஞ்சுகிறார் என இப்போது புரிகிறது எனத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பவன் கெரா வெளியிட்டுள்ள சமூக வலைதளப்பதிவில், ”இதற்கு முன் ஹிண்டன்பர்க் அதானியை அம்பலப்படுத்தியபோது கூட செபி ஒன்றும் செய்யவில்லை. உச்சநீதிமன்றம் கூட செபியின் செயலற்ற தன்மையை விமர்சித்தது. அதானி குழுமத்தின் தந்திரத்தால் செபி சுதந்திரமாக செயல்பட முடியவில்லை. எல்லாவற்றுக்கும் காரணம் இந்திய அரசாங்கம்தான். மாதவி புச்சை செபி தலைவராக்கியது அந்த அமைப்பையும் அழித்தது பாஜக அரசுதான்.
செபியின் தலைவராக மாதவி பூச்சை நியமிக்கும்போது பாஜகவினர் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? அதானியின் வெளிநாட்டு நிறுவனங்களில் அவர் முதலீடு செய்திருந்தது தெரியாதா? அதானி, மோடி, பூச் ஆகியோருக்காக மட்டுமே நடத்தப்படும் தனி நிறுவனம் போல் செபி செயல்பட்டிருக்கிறது.” என்று தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் ஹிண்டன்பர்க் புதிய அறிக்கை செபி மீது சந்தேக சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. எனவே, அதானி பங்குச்சந்தை முறைகேடு விசாரணையை செபி உடனடியாக முடிக்க உத்தரவிட வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதானி பங்குச்சந்தை முறைகேடு தொடர்பாக மனு தாக்கல் செய்திருந்த மனுதாரர்களில் ஒருவரான விஷால் திவாரி என்பவர் இந்த புதிய மனுவை தாக்கல் செய்துள்ளார்.
அதில் ஹிண்டன்பர்க் அறிக்கை செபி மீதான சந்தேக சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. எனவே, செபி நிலுவையில் உள்ள விசாரணைகளை உடனடியாக முடித்து, விசாரணை முடிவை வெளியிடுவதுதான் முறையாக இருக்கும். அதற்கான உத்தரவை உச்சநீதிமன்ற பிறப்பிக்க வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டுள்ளது.
அதானிக்கு எதிரான வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றம் கடந்த ஜனவரி மாதம் பிறப்பித்த உத்தரவில் மூன்று மாதத்திற்குள் செபி விசாரணையை முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. விசாரணை முடியாத நிலையில் மனுதாரர் உச்சநீதிமன்றத்தில் கடந்த ஜூன் மாதம் மீண்டும் மனு தாக்கல் செய்தார். ஆனால் அந்த மனுவை உச்ச நீதிமன்ற பதிவாளர் அலுவலகம் நிராகரித்துவிட்டது. இதனிடைய தற்போது எழுந்து உள்ள புதிய சூழலைக் குறிப்பிட்டு புதிய மனுவை விஷால் திவாரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.
Also Read
-
”அதிமுக ஆட்சியில் போர்டு வைத்ததுபோல் அல்ல” : பழனிசாமிக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
-
தென்னிந்தியாவிலேயே முதன்முறை : ரூ. 18.18 கோடி செலவில் துல்லிய பொறியியல் தொழில்நுட்ப மையம்!
-
திருவள்ளூரில் ரூ.330 கோடியில் 21 தளங்களுடன் மாபெரும் டைடல் பூங்கா! : முதலமைச்சர் திறந்து வைத்தார்!
-
கடற்கரை - தாம்பரம் இடையே இயக்கப்படும் 28 மின்சார ரயில்கள் இன்று ரத்து! : கூடுதல் பேருந்துகள் இயக்கம்!
-
ரூ.58 கோடி மதிப்பீட்டில் சுற்றுச்சூழல் பூங்காவாக மாறும் கடப்பாக்கம் ஏரி! : சென்னை மாநகராட்சி அறிவிப்பு!