India

வயநாடு நிலச்சரிவு : 400-க்கும் மேற்பட்டோர் பரிதாப பலி... தேசிய பேரிடராக அறிவிக்க மோடி அரசு மறுப்பு !

கேரள மாநிலத்தில் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக, வயநாடு பகுதியில் உள்ள சூரல் மலை, மேப்பாடி, முண்டகை ஆகிய பகுதிகளில் கடந்த 30-ம் தேதி அதிகாலை மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் பல குடும்பங்கள் சிக்கி கொண்ட நிலையில் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இன்னும் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் காணவில்லை என்று தேடப்பட்டு வரும் நிலையில், எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் நிகழ்வு நடந்த இடத்தை நேரில் சென்று பார்வையிட்டனர். மேலும் ஒன்றிய அரசு வயநாட்டு பகுதியை மீட்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

இதனிடையே அண்டை மாநிலத்துக்கு உதவும் எண்ணத்தில் தமிழ்நாடு அரசு ரூ.5 கோடி நிதியுதவி அளித்ததோடு, மருத்துவ உதவிகளையும், மீட்புக்குழுவையும் அனுப்பி உதவி செய்து வருகிறது. அதோடு கர்நாடக காங்கிரஸ் அரசும் 100 வீடுகள் கட்டி தருவதாக உறுதியளித்துள்ளது. தொடர்ந்து தென்னிந்திய நடிகர், நடிகைகளும் நிதியுதவி அளித்துள்ளனர்.

நாட்டையே உலுக்கிய இந்த கோர சம்பவத்தை பலரும் கண்டு அனுதாபம் பட்டு உதவிக்கரம் நீட்டி வரும் நிலையில், ஒன்றிய அரசு கண்டும் காணாதது போல் இருந்து வருகிறது. தொடர்ந்து இந்த பேரிடரை தேசிய பேரிடராக அறிவிக்கக் கோரி கேரள அரசும், இந்தியா கூட்டணி கட்சிகளும் வலியுறுத்தி வரும் நிலையில், இதனை அவ்வாறு அறிவிக்க இயலாது என்று ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

நிலச்சரிவு ஏற்பட்டு 10 நாட்களுக்கும் மேலாக ஆகியிருக்கும் நிலையில், இன்று பிரதமர் மோடி வயநாட்டில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இந்த சூழலில் இந்த நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க விதியில்லை என்று ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. மேலும் இது போன்ற நிகழ்வுகளுக்கு முதன்மை பொறுப்பு மாநில அரசுகளுக்குதான், ஒன்றிய அரசு தேவைப்பட்டால் கூடுதல் உதவி செய்யும் என்றும் விளக்கம் அளித்துள்ளது.

அதாவது உள்துறை அமைச்சகத்தை சேர்ந்த அதிகாரிகள் நிகழ்வு நடந்த இடத்தை நேரில் பார்வையிட்டு சமரமிக்கப்படும் அறிக்கையில், கடுமையாக இயற்கை பேரிடராக இருந்தால், தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து நிதி ஒதுக்கப்படும் என்றும், ஆனால் இதனை தேசிய பேரிடராக அறிவிக்க இயலாது என்றும் அறிவித்துள்ளது.

முன்னதாக தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு அடுத்தடுத்து என சென்னை, தூத்துக்குடி உள்ளிட்ட 4 மாவட்டங்கள் வெள்ள பாதிப்பால் கடும் பாதிப்பு ஏற்பட்டபோதும், ஒன்றிய அரசு தேசிய பேரிடராக அறிவிக்க இயலாது என்று கூறியதோடு, நிவாரண நிதியையும் ஒதுக்கவில்லை. இந்த முறை பட்ஜெட்டில் கூட,இதனை அப்படியே உதரி தள்ளிவிட்டது.

இந்த சூழலில் தற்போது கேரளா பேரிடரில் கூட ஒன்றிய அரசு தனது சுயநலத்தை வெளிப்படுத்தியுள்ளது பெரும் கண்டனங்களை எழுப்பி வருகிறது.

Also Read: ”வக்ஃபு வாரிய சட்டத்திருத்த மசோதா மோடி அரசின் பழிவாங்கும் செயல்” : நாராயணசாமி எதிர்ப்பு!