India

“துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர் மன்னிப்பு கேட்க வேண்டும்” : சமாஜ்வாதி எம்.பி ஜெயா பச்சன்!

நாடாளுமன்ற மாநிலங்களவையில், பா.ஜ.க.வின் பிரதிநிதிகள் எந்த எல்லைக்கு சென்று பேசினாலும் தவறில்லை என்பதான கருத்தை முன்வைத்த, மாநிலங்களவை தலைவரும், துணை குடியரசுத் தலைவருமான கெஜதீப் தன்கருக்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

ஒலிம்பிக் போட்டியில் தகுதிநீக்கம் செய்யப்பட்ட வினேஷ் போகத்திற்கு நீதி கேட்டு, நாடாளுமன்றத்தில் விவாதம் தேவை என மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தொடர்ந்து மூன்று நாட்களாக வலியுறுத்தி வருகிற நிலையில், எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகள் தொடர்ச்சியாக புறக்கணிக்கப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இன்றைய மாநிலங்களவை கூட்டத்திலும் அவ்வாறான கோரிக்கைகள் எதிர்க்கட்சியினரால் முன்வைக்கப்பட்டது. அப்போது பா.ஜ.க.வின் மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான கன்சியாம் திவாரி, எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை தரக்குறைவாக பேசியுள்ளார்.

அதற்கு அவைத்தலைவரான ஜெகதீப் தன்கரும், கன்சியாம் பேசியதில் தவறில்லை என்பதான கருத்தை முன்வைத்துள்ளார். இதனால், மாநிலங்களவையிலிருந்து, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கூட்டாக வெளியேறினர்.

அதன் பிறகு, சமாஜ்வாதி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் ஜெயா பச்சன் செய்தியாளர்களை சந்தித்தபோது, “அரசியலமைப்பிற்கு எதிர்மறையான சொற்களை, குறிப்பாக ‘மூளையற்றவர்’ என்பதான தரக்குறைவான சொற்களை பா.ஜ.க மாநிலங்களவை உறுப்பினர் கன்சியாம் திவாரி பயன்படுத்தினார். அதற்கு அவைத்தலைவர் ஜெகதீப் தன்கரும் சார்பாக பேசினார். நாங்கள் அரசியலில் நீண்ட காலம் பயணித்தவர்கள். எங்களை பள்ளி மாணவர்களை கையாளுவது போல கையாளுவது சரியல்ல. இத்தகைய விரும்பத்தகாத நடவடிக்கைகளில் ஈடுபட்ட துணை குடியரசுத் தலைவர் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்றார்.

Also Read: பாராட்டுவதிலும் பாரபட்சம் பார்க்கும் பா.ஜ.க! : ஒலிம்பிக்கில் சாதனை படைத்தவர்கள் மீதும் விமர்சனம்!