India

வினேஷ் போகத் தகுதி நீங்கம் - பிரதமர் மோடி அமைதியாக இருப்பது ஏன்? : காங்கிரஸ் கேள்வி!

பாரிஸ் ஒலிம்பிக் தொடரின் மல்யுத்த மல்யுத்த போட்டியில் 50 கிலோ மகளிர் எடை பிடியில் இந்திய வீரர் வினேஷ் போகத் கலந்துகொண்டார். இவர் அரையுறுதிபோட்டியில் கியூபாவின் கஸ்மான் லோபசை 5-0 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இதன் மூலம் மல்யுத்தத்தில் இறுதிபோட்டிக்கு தகுதி பெற்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை வினேஷ் போகத் பெற்றார்.

இந்நிலையில் இறுதிப்போட்டியில் தங்கம் பதக்கம் வெல்வார் என்று நாடே எதிர்பார்த்த நிலையில், 50 கிலோ எடையை விட 100 கிராம் அதிக எடை இருந்ததாக கூறப்பட்டு வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து வினேஷ் போகத் தகுதி நீக்கத்தில் ஏதாவது சதி இருக்குமோ என்ற கேள்வியும் எழுந்துள்ளது. காரணம் ஒன்றிய பா.ஜ.க அரசின் முன்னாள் எம்.பி.யும், முன்னாள் இந்திய மல்யுத்த அமைப்பின் தலைவருமான பிரிஜ் பூஷன், பெண் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் வன்முறை அளித்தார் என்று குற்றம் சாட்டி சாலைகளில் போராடிய பலரில், வினேஷ் போகத்தும் ஒருவர்.

அதேபோல் நடந்து வரும் நாடாளுமுன்ற கூட்டத் தொடரில், ஒன்றிய விளையாட்டுத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா ”வினேஷ் போகத் தகுதி நீக்கத்தை மறு பரிசீலனை செய்ய இந்திய ஒலிம்பிக் சங்கம் முயற்சி செய்தும் பலன் கிடைக்கவில்லை” அலட்சியமாக பதில் அளித்துள்ளார்.

இதற்கிடையில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட இந்தியா கூட்டணி தலைவர்கள் வினேஷ் போகத்க்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறார்கள்.

இந்நிலையில், வினேஷ் போகத் தகுதி நீங்கம் செய்யப்பட்டது குறித்து பிரதமர் மோடி ஏன் அமைதியாக இருக்கிறார்? என காங்கிரஸ் பொதுச் செயலாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா கேள்வி எழுப்பியுள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த ரன்தீப் சிங் சுர்ஜேவாலா," வினேஷ் போகத் விவகாரத்தில் இந்திய மல்யுத்த கூட்டமைப்பு மற்றும் இந்திய ஒலிம்பிக் சங்கம், விளையாட்டு துறை அமைச்சர் ஆகியோர் என்ன செய்து கொண்டிருந்தனர்.

மூன்று முறை ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்ட ஒரு வீரர் 100 கிராம் எடை அதிகரிப்பு என்று நிராகரிக்கப்பட்டுள்ளார். இந்திய அரசு என்ன செய்து கொண்டு இருந்தனர்?. வினேஷ் போகத் தகுதி நீங்கம் செய்யப்பட்டது குறித்து பிரதமர் மோடி ஏன் அமைதியாக இருக்கிறார்?. சர்வதேச ஒலிம்பிக் சங்கத்திற்கு ஏன் அழுத்தம் தரவில்லை? வெள்ளிப் பதக்கத்தைக் கூட ஒன்றிய அரசு உறுதி செய்ய முயற்சிக்காமல் இருப்பது ஏன்?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

Also Read: ”மக்களின் இதயத்தை வென்ற வினேஷ் போகத்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆதரவு!