India

சுங்கச் சாவடி கட்டணம் - மாநில அரசுகளுக்கு நிதிப் பகிர்வு இல்லை : திமுக MP கேள்விக்கு நிதின் கட்கரி பதில்!

சுங்கச் சாவடிகளில் வசூலிக்கப்படும் தொகை எவ்வளவு? அவ்வாறு வசூலிக்கும் தொகையில் சம்பந்தப்பட்ட மாநில அரசுக்கு பங்கு தரப்படுகிறதா? என்று மாநிலங்களவையில் தி.மு.க. எம்.பி. டாக்டர் கனிமொழி என்.வி.என். சோமு கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு ஒன்றிய தரைவழிப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி அளித்த பதில் வருமாறு:-

நாடு முழுவதும் 48 ஆயிரத்து 452 கிலோமீட்டர் நீளத்திற்கு சுங்கச் சாலை உள்ளது. இவற்றில் பயணிக்கும் வாகன ஓட்டிகளிடம் இருந்து 983 சுங்கச் சாவடிகள் மூலமாக ஃபாஸ்ட் டேக் முறையில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. 2023-24ம் நிதியாண்டில் இந்தியாவில் 55 ஆயிரத்து 844 கோடி ரூபாய் இந்த சுங்கச் சாவடிகள் மூலம் கட்டணம் வசூல் செய்யப்பட்டது.

அதிகபட்சமாக உத்தரப் பிரதேசத்தில் சுமார் 6695 கோடி ரூபாயும் தமிழகத்தில் 4221 கோடி ரூபாயும் வசூல் செய்யப்பட்டது. தமிழகத்தைப் பொறுத்தவரை 3109 கிலோமீட்டர் நீளமுள்ள சுங்க சாலையில் 67 சுங்கச் சாவடிகள் மூலம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இப்படி வசூலிக்கப்படும் கட்டணத் தொகையை ஏலம் மூலம் நியமிக்கப்படும் வசூலிக்கும் எஜென்சிகள் வசூலித்து, தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கணக்கில் செலுத்துகின்றன. அந்தப் பணம் மீண்டும் இந்திய ஒருங்கிணைந்த நிதிக் கணக்கில் செலுத்தப்படுகிறது. சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு எந்த நிதிப் பகிர்வும் இந்தக் கட்டண வசூல் தொகையிலிருந்து வழங்கப்படுவதில்லை.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Also Read: ”இட ஒதுக்கீட்டுக் கொள்கையை சிதைக்கும் ரயில்வே தேர்வு வாரியம்”: மக்களவையில் கலாநிதி வீராசாமி குற்றச்சாட்டு