India

”நிபந்தனையற்ற இடஒதுக்கீடு வேண்டும்” : நாடாளுமன்றத்தில் ஆ.ராசா எம்.பி வலியுறுத்தியது என்ன?

நாடாளுமன்ற கூட்டத்தொடர் கடந்த ஜூலை 22 ஆம் தேதி தொடங்கியது. இதையடுத்து ஜூலை 23 ஆம் தேதி 2024-25 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இன்றைய மக்களவையில் பேசிய ஆ.ராசா எம்.பி, ”2009 ஆம் ஆண்டு கலைஞர் ஆட்சியின்போது தமிழ்நாட்டில் அருந்ததியர் இட ஒதுக்கீட்டு சட்டம் கொண்டுவரப்பட்டது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் அண்மையில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

தமிழ்நாடு சட்டத்திற்கு ஒப்புதல் அளித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அந்த பட்டியல், பழங்குடியினர் பிரிவு ஒதுக்கீட்டு தீர்ப்பில் உச்சநீதிமன்றம் சில கருத்துக்களையும் தெரிவித்துள்ளது. அதில் உள் இடஒதுக்கீடு வழங்கும் போது கிரீமிலேயர் எனும் பொருளாதார அளவு கோலையும் கருத்தில் கொள்ள வேண்டும். வரும் காலங்களில் முதல் தலைமுறையினருக்கு மட்டும் இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து ஆலோசிக்க வேண்டும் என்று கூறியுள்ளது.

இன்றைய காலகட்டத்திலும் பொருளாதார இட ஒதுக்கீடு என்பது இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு பொருந்தாத சமூக நிலைதான் நீடிக்கிறது. எனவே உச்சநீதிமன்றம் வழங்கி இருக்கும் தீர்ப்பில் நீதிபதிகள் தெரிவித்துள்ள கருத்துக்களை நீக்குவது தொடர்பாக ஒன்றிய அரசு மேல் முறையீடு செய்ய வேண்டும். நிபந்தனையற்ற இட ஒதுக்கீடு முறை நீடிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்" என வலியுறுத்தி பேசினார்.

Also Read: "ஒன்றிய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் ஒரு பொய்யர்" : உரிமை மீறல் நோட்டிஸ் வழங்கிய காங்கிரஸ்!