India

காணாமல் போன இளம் பெண் : போலிஸ் விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல்!

உத்தர பிரதேச மாநிலம் ஹந்தா பசேகரி என்ற கிராமத்தில் உள்ள ஆற்றங்கரையில் கடந்த ஜூலை 23-ம் தேதி தலையில்லா பெண்ணின் சடலம் கண்டறியப்பட்டது. இதுகுறித்து போலீசாருக்கு அளிக்கப்பட்ட தகவலின்பேரில், விரைந்து வந்த அவர்கள் சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். அப்போது உடல் கண்டறியப்படுவதற்கு முந்தைய நாள், அதே பகுதியை சேர்ந்த ஷீபா (20) என்ற இஸ்லாமிய இளம்பெண் காணாமல் போனதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அந்த பெண்ணின் காலில் கட்டிய கருப்பு கயிறை வைத்து, ஷீபாவின் குடும்பத்தினர் அடையாளம் கண்டனர். பின்னரே அந்த பெண் ஷீபா என்று உறுதியானது. இதையடுத்து ஷீபா குறித்து போலீசார் விசாரிக்கையில், அவர் தனது தாய்மாமா வீட்டில் வசித்து வந்ததும், பக்கத்து ஊரில் வசிக்கும் அருண் சாய்நி என்ற இளைஞருடன் போனில் பேசி வந்ததும் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து அருணை கைது செய்து விசாரிக்கையில் பகீர் தகவல் வெளியே வந்தது. அருணும், ஷீபாவும் பள்ளி பருவத்தில் இருந்தே காதலித்து வந்துள்ளனர். இவர்கள் காதல் விவகாரம் இருவரது வீட்டிற்கும் தெரியவர, வெவ்வேறு மதம் என்பதால் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த விவகாரத்தில் ஷீபாவின் மாமா, அருணை தாக்கியும் உள்ளார். எனினும் ஷீபா தனது காதலை விட மறுத்துள்ளார்.

இந்த சூழலில் தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி, அருணிடம் ஷீபா கூறியபோது, அவர் மறுப்பு தெரிவித்து வந்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. அந்த வகையில் சம்பவத்தன்றும், ஷீபா தன்னை திருமணம் செய்யும்படி அருணிடம் கூறியுள்ளார். இதனால் தனது நண்பருடன் திட்டம் தீட்டிய அருண், ஷீபாவை தனியாக வரவழைத்துள்ளார்.

அங்கே இருவருக்கும் வாக்குவாதம் முற்றவே, தனது காதலி ஷீபாவின் தலையை வெட்டி கொலை செய்து, அவரது கைகள், விரல்களையும் வெட்டி, அவரது உடலை ஆற்றில் தூக்கி வீசியெறிந்துள்ளார். மேலும் தலையை வேறு பக்கம் புதைத்துள்ளார். இவையனைத்தும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து காதலன் அருண் மற்றும் அவரது நண்பர் குல்தீப் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து அவர்கள் கொலை செய்ய பயன்படுத்திய ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து மேலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Also Read: 4ஆம் ஆண்டில் அடி எடுக்கும் “மக்களைத் தேடி மருத்துவம்” திட்டம் : 5.93 கோடி பேர் பயன்!