India

பள்ளி, கல்லூரிகள் மீண்டும் திறப்பு : இயல்பு நிலைக்கு திரும்பும் வயநாடு!

கேரள மாநிலத்தின் வயநாடு மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்பட்டு, இதுவரை சுமார் 387 பேர் இறந்துள்ளனர். சுமார் 180 பேர் மாயமானதால், தேடுதல் பணி 7 ஆவது நாளாக நீடிக்கிறது.

இவ்வியற்கை பாதிப்பை, தேசிய பேரிடராக அறிவிக்கக்கோரி இந்தியா கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர் கோரிக்கைகள் விடுத்தும், அதனை ஒன்றிய பா.ஜ.க அரசு மறுத்துவிட்டது.

எனினும், நிலச்சரிவில் சிக்கிக்கொண்ட மக்கள் உடனடியாக மீட்கப்பட வேண்டும் என தமிழ்நாடு அரசின் சார்பில், நிவாரணக்குழு அனுப்பப்பட்டு, ரூ. 5 கோடி நிதி வழங்கப்பட்டது.

நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியும், காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியும் இரு நாட்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு, இயற்கை பேரிடரில் வீடுகளை இழந்தோருக்கு மீண்டும் வீடுகள் அமைத்து தர உறுதியளித்தனர்.

இந்நிலையில், 7 நாட்களாக தொடரும் மீட்புப்பணி ஓரளவு நிறைவடைந்ததையொட்டி, வயநாட்டில் இயல்நிலை திரும்பிய இடங்களில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

நிவாரண முகாம்களாக செயல்படும் பள்ளிகள் தவிர்த்து, பிற பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: உள் ஒதுக்கீடு தீர்ப்பு : “கலைஞரின் தொலைநோக்குச் சிந்தனைக்குக் கிடைத்த வெற்றி” - முரசொலி நெகிழ்ச்சி !