India

வயநாடு நிலச்சரிவு : 100 வீடுகள் கட்டிக்கொடுக்க முடிவு... கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா அறிவிப்பு !

கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் வயநாடு பகுதியில் உள்ள சூரல் மலை, மேப்பாடி, முண்டகை ஆகிய பகுதிகளில் கடந்த 30-ம் தேதி அதிகாலை மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் 400-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் சிக்கி கொண்டன.

இந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 350 ஆக அதிகரித்துள்ள நிலையில், ஏராளமானோரை காணவில்லை என்று உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என அச்சம் எழுந்துள்ளது. இதனால் மீட்புப்படையினர் பல்வேறு இடங்களிலும் மீட்புப்பணியை துரிதப்படுத்தியுள்ளனர். எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் நாட்களாக நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தனர். ஒன்றிய அரசு வயநாட்டு பகுதியை மீட்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

இந்த சூழலில் இந்த கோர நிகழ்வை தேசிய பேரிடராக அறிவிக்க அறிவிக்க ஒன்றிய அரசு தயாராக இல்லை என்று கேரள வருவாய்த்துறை அமைச்சர் கே.ராஜன் குற்றம்சாட்டியுள்ளார். இதனிடையே அண்டை மாநிலத்துக்கு உதவும் எண்ணத்தில் தமிழ்நாடு அரசு ரூ.5 கோடி நிதியுதவி அளித்ததோடு, மருத்துவ உதவிகளையும், மீட்புக்குழுவையும் அனுப்பி உதவி செய்து வருகிறது.

இந்த நிலையில், தற்போது மற்றொரு அண்டை மாநிலமான கர்நாடக அரசு, பாதிக்கப்பட்ட நபர்களுக்கு 100 வீடுகள் கட்டித்தருவதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தனது ட்விட்டர் பக்கத்தில், "இந்த பேரிடர் காலத்தில் கர்நாடக அரசு, கேரளாவுடன் துணை நிற்கிறது. பாதிக்கப்பட்டவர்களுக்காக கர்நாடகா சார்பில் 100 வீடுகள் கட்டித்தரப்படும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

கர்நாடக காங்கிரஸ் அரசின் இந்த அறிவிப்புக்கு காங்கிரஸ் முன்னணி தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி வரவேற்பு அளித்துள்ளார். மேலும் கேரளா முதலமைச்சர் பினராயி விஜயனும், "வயநாட்டில் நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு 100 வீடுகள் கட்டித் தர முன்வந்த கர்நாடக அரசின் இந்த இரக்க உணர்வு நம்மை நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. மேலும் மறுவாழ்வு மற்றும் மறுகட்டமைப்பைத் தொடர்வதற்கான உறுதியை பலப்படுத்துகிறது." என்று குறிப்பிட்டு நன்றி தெரிவித்துள்ளார்.

Also Read: திடீரென இடிந்து விழுந்த கோயில் சுவர்... 9 குழந்தைகள் பரிதாப பலி... பாஜக ஆளும் ம.பி-யில் கோரம்!