India

வயநாடு நிலச்சரிவு : காட்டில் தஞ்சமடைந்த பாட்டி, பேத்தியை காத்த காட்டுயானை... நெகிழ்ச்சி சம்பவம் !

கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் வயநாடு பகுதியில் உள்ள சூரல் மலை, மேப்பாடி, முண்டகை ஆகிய பகுதிகளில் கடந்த 30-ம் தேதி அதிகாலை மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் 400-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் சிக்கி கொண்டன.

இந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 344 ஆக அதிகரித்துள்ள நிலையில், ஏராளமானோரை காணவில்லை என்று உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என அச்சம் எழுந்துள்ளது. இதனால் மீட்புப்படையினர் பல்வேறு இடங்களிலும் மீட்புப்பணியை துரிதப்படுத்தியுள்ளனர்.

இந்த நிலையில், வயநாடு நிலச்சரிவில் சிக்கி தனது பேத்தியுடன் தப்பிய பாட்டி ஒருவர் கூறிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வயநாடு நிலச்சரிவில் இருந்து மீண்ட மூதாட்டி சுஜாதா என்பவர் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், "வயநாடு நிலச்சரிவில் சிக்கிய நானும் எனது பேத்தியும் அங்கிருந்து தப்பித்து, அருகில் இருந்த காட்டுப்பகுதியில் தஞ்சமடைந்தோம். அங்கே காட்டுயானை எங்கள் எதிரே வழிமறித்து நின்றது.

"நாங்கள் ஏற்கெனவே செத்து பிழைத்து வந்திருக்கிறோம்; எங்களை எதுவும் செய்துவிடாதே!" என கண்ணீர் விட்டு மன்றாடினேன். எங்களின் அழுகையை புரிந்துக்கொண்ட யானை கண்களில் கண்ணீர் வடிந்ததை பார்த்தேன். நானும் என்பேத்தியும் அருகில் இருந்த மரத்துக்கு பக்கத்தில் உட்காந்துவிட்டோம். மீட்புக்குழுவினர் அடுத்தநாள் வரும் வரை எங்களை பாதுகாக்க யானையும் அங்கே இருந்தது. பின்னர் தான் யானை அங்கிருந்து புறப்பட்டுச் சென்றது" என்று கூறியுள்ளார். இந்த நெகிழ்ச்சி சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Also Read: பாரிஸ் ஒலிம்பிக்ஸ்: ஆணா, பெண்ணா? என்ற சர்ச்சையில் சிக்கிய இமானே கெலிஃப்- ஆதரவு கரம் நீட்டிய டூட்டி சந்த்!