India
”செல்போன் அதிகரிப்பால் டிஜிட்டல் பரிவர்த்தனை அதிகரிப்பு” : கனிமொழி சோமு கேள்விக்கு ஒன்றிய அரசு பதில்!
நாடாளுமன்றத்தில் ஒன்றிய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து, பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மாநிலங்களவையில் தி.மு.க. எம்.பி கனிமொழி என்.வி.என். சோமு , கிராமப் பகுதிகளுக்கு எந்தளவுக்கு இணையதள வசதி சென்று சேர்ந்திருக்கிறது? இணையதள வசதி போதுமான அளவுக்கு இல்லாததால் கிராமப் பகுதிகளில் டிஜிட்டல் பரிவர்த்தனை முழு அளவில் நடைபெறுவது தடைபடுகிறதா? என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு ஒன்றிய தகவல் தொடர்பு மற்றும் கிராமப்புற வளர்ச்சித் துறை இணையமைச்சர் டாக்டர் பெம்மசனி சந்திரசேகர் பதிலளித்துள்ளார். அதில்,” இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் வழங்கிய தரவுகளின்படி மார்ச் 2024 வரையிலான காலகட்டத்தில் இந்தியாவில் கிராமப் பகுதிகளில் சுமார் 40 கோடி இணையதள இணைப்புகளும்;நகர்ப்பகுதிகளில் 55 கோடி இணைப்புகளும் பயன்பாட்டில் உள்ளன. நகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 7.5 கோடி இணைப்புகளும், கிராமப் பகுதிகளைப் பொறுத்தவரை உத்தரப் பிரதேசத்தில் அதிகபட்சமாக 6.4 கோடி இணையதள இணைப்புகளும் வழங்கப்பட்டுள்ளன.
தமிழகத்தைப் பொறுத்தவரை கிராமப் பகுதிகளில் 1.7 கோடி மற்றும் நகர்ப்பகுதிகளில் 4.4 கோடி இணையதள இணைப்புகள் பயன்பாட்டில் உள்ளன.
சேவை வழங்கும் நிறுவனங்களின் தொழில் போட்டியால் குறையும் செல்போன் கட்டணம், குறைந்த விலையில் கிடைக்கும் மொபைல் போன்கள், நவீன தொழில் நுட்பங்கள், பரவலான நெட்வொர்க் வசதிகள் என பல காரணங்களால் செல்போன் பயன்பாடு அதிகரித்திருப்பதால் டிஜிட்டல் பரிவர்த்தனையின் அளவும் கூடிக்கொண்டே வருகிறது.
2019-20 ம் நிதியாண்டில் 4,572 கோடி ரூபாயாக இருந்த டிஜிட்டல் பரிவர்த்தனை 2023-24 ம் நிதியாண்டில் 18,737 கோடி ரூபாய உயர்ந்துள்ளது. ஆனாலும் கிராமப் பகுதிகளில் டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கவும் அதுபற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பாரத் நெட் திட்டத்தின் மூலம் 30.06.2024 வரை 213,398 கிராமப் பஞ்சாயத்துகளுக்கு இணையதள வசதி செய்யப்பட்டுவிட்டது. சமீபத்தில் மத்திய அமைச்சரவை எடுத்த முடிவின்படி, கிராமப் பஞ்சாயத்துகளைத் தாண்டி, குக்கிராமங்களுக்கும் இணையதள வசதியை விரிவுபடுத்தும் வகையில் பாரத் நெட் திட்டத்தில் விதிகள் தளர்த்தப்பட்டுள்ளது.
இதுதவிர வடகிழக்கு மாநிலங்கள், எல்லைப்புற பகுதிகள், நக்சலைட்டுகளால் பாதிக்கப்பட்ட பகுதிகள், தீவுப் பகுதிகள் என நாட்டின் எல்லா பகுதிகளிலும் இணையதள வசதி கிடைக்க பல்வேறு சிறப்புத் திட்டங்கள் வகுக்கப்பட்டு செயல்படுத்தப் படுகின்றன.
இதுவரை 4 ஜி மொபைல் சேவை கிடைக்காத கிராமங்கள் அனைத்திற்கும் அது கிடைக்கும் வகையில் 26 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் சிறப்புத் திட்டம் ஒன்று செயல்பாட்டில் உள்ளது. அதிவேக இணையதள சேவை வழங்கும் வகையில் சென்னையிலிருந்து அந்தமானுக்கும்; கேரள மாநிலம்
கொச்சியிலிருந்து லட்சத்தீவுகளுக்கும் (1869 கி.மீ. நீளம்) கடலுக்கு அடியில் ஆப்டிகல் ஃபைபர் கேபிள் பதிக்கும் பணியும் முடிவுறும் நிலையில் உள்ளது. அதிவேக இணையதள சேவைக்கான உட்கட்டமைப்பு பணிகளுக்காக 24 மாநிலங்களுக்கு மூன்றாயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்தப் பணிகளை தடைகளின்றி விரைந்து முடிக்கும் வகையில் தேவையான சட்டத்திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளது. இதுதவிர, எந்தெந்தப் பகுதிகளில் செல்போன் நெட்வொர்க் பிரச்னைகள் உள்ளது. அதை எப்படி சரி செய்வது என்பது பற்றி டிராய் அமைப்பு அவ்வப்போது ஆய்வுகளை நடத்தி அதன் முடிவுகளின்படியும் தேவையான நடவடிக்கைகளை ஒன்றிய அரசு எடுத்து வருகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
”தீபாவளியை கொண்டாட மகிழ்ச்சியாக பயணிக்கும் மக்கள்” : அமைச்சர் சிவசங்கர் பேட்டி!
-
தீபாவளிக்கு வெளியாகும் படங்கள் என்ன?: முழு விவரம் இங்கே!
-
2 மணி நேரத்தில் 3 கோடிக்கு ஆடுகள் விற்பனை : களைகட்ட தொடங்கிய தீபாவளி !
-
உக்ரைனின் ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த நகரை கைப்பற்றியது ரஷ்யா : போரில் தொடரும் ரஷ்ய ஆதிக்கம் !
-
மதுரையில் வெள்ள பாதிப்பை தடுக்க ரூ.11.9 கோடி நிதி : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!