India

”எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்திக்கு ஆதரவாக இந்தியா நிற்கும்” : பிரியங்கா சதுர்வேதி MP

ஒன்றியத்தில் ஆட்சியில் இருக்கும் மோடி அரசை விமர்சிப்பவர்கள் மீது அச்சுறுதல்களும், தாக்குதல்களும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. குறிப்பாக மோடி அரசு ஆட்சி அதிகாரத்திற்கு வந்ததிலிருந்து மக்கள் விரோத நடவடிக்கை அதிகரித்துள்ளது.

அதுமட்டுமின்றி தங்களை எதிர்க்கும் அரசியல் கட்சி தலைவர்கள் மீது அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ போன்ற அமைப்புகளை ஏவி அவர்கள் மீது வழக்கு தொடர்ந்து வருகிறது ஒன்றிய பாஜக அரசு.

குறிப்பாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் ஆகிய இருவரை அமலாக்கத்துறையை வைத்து ஒன்றிய அரசு கைது செய்தது. இது குறித்தான வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தனக்கு எதிராக அமலாக்கத்துறையை ஏவி விட ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளது அரசியல் விட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

”எனது சக்கர வியூகம் பேச்சு இரண்டு பேருக்கு பிடிக்க வில்லை. அமலாக்கத்துறை சோதனை நடத்த ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. நான் திறந்த கரங்களுடன் உங்களை வரவேற்க காத்திருக்கிறேன்” என சமூகவலைதளத்தில் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து ராகுல் காந்திக்கு ஆதரவாக இந்தியா கூட்டணி தலைவர்கள் குரல் கொடுத்து வருகிறார்கள். சிவசேனா (உத்தவ் தாக்கரே பிரிவு) எம்.பி. பிரியங்கா சதுர்வேதி, "பாஜக பயந்தால் அமலாக்கத்துறையையும் வருமானவரித்துறையையும் முடுக்கி விடும். இந்த அரசாங்கம் தன் திட்டத்தை ED, CBI, IT ஆகிய துறைகளை கொண்டு எப்படி செயல்படுத்தி வருகிறது என்பதைத்தான் தொடர்ந்து பேசி வருகிறோம். இந்த அமைப்புகள் ஒன்றிய அரசிடம் மண்டி போட்டு கிடக்கும் தன்மையைத்தான் அவற்றின் செயல்பாடுகள் வெளிப்படுத்துகின்றன. ராகுல் வீட்டுக்கு அமலாக்கத்துறை சென்றால் மொத்த இந்தியா கூட்டணியும் அதை எதிர்ப்போம்." என தெரிவித்துள்ளார்.

Also Read: ”செல்போன் அதிகரிப்பால் டிஜிட்டல் பரிவர்த்தனை அதிகரிப்பு” : கனிமொழி சோமு கேள்விக்கு ஒன்றிய அரசு பதில்!