India
வயநாடு நிலச்சரிவுக்கு எச்சரிக்கை விடப்பட்டதா? - அமித்ஷாவுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் பதிலடி !
கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில், பல்வேறு பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டது. இந்த சூழலில் கடந்த நேற்று அதிகாலை நேரத்தில் வயநாடு பகுதியில் உள்ள சூரல் மலை, மேப்பாடி, முண்டகை ஆகிய பகுதிகளில் மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் 400-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் சிக்கி கொண்டன.
மேலும் பலர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வரும் நிலையில், தொடர்ந்து மீட்புப்பணிகள் நடைபெற்று வருகிறது. நாட்டையே உலுக்கிய இந்த கோர விபத்தில் சிக்கி இதுவரை சுமார் 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 200-க்கும் மேற்பட்டோர் இன்னும் மீட்கப்படாத நிலையில், உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கக்கூடும் என்றும் கூறப்படுகிறது.
இந்த கொடூர நிகழ்வு நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கும் நிலையில், பலரும் இந்த சம்பவம் குறித்து ஆறுதல் தெரிவித்து வரும் சூழலில், பாஜக இதிலும் அரசியல் செய்து வருகிறது. நாடளுமன்றத்தில் பேசிய பாஜக எம்.பி. தேஜஸ்வி சூர்யா, கேரளாவில் இடதுசாரிகள், காங்கிரஸ் ஆட்சி இருந்ததால்தான் இது போன்ற பேரிடர்கள் நிகழ்வதாக வாய் கூசாமல் அற்ப காரணத்தை கூறினார்.
மேலும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு குறித்து கேரள மாநில அரசுக்கு கடந்த ஜூலை 23-ம் தேதியே எச்சரிக்கை விடுத்ததாக ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார். இந்த சூழலில் அமித்ஷா கூறியது பொய் என்றும், பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளுக்கு ரெட் அலெர்ட் கொடுக்காமல், வெறும் ஆரஞ்சு அலெர்ட் மட்டுமே கொடுக்கப்பட்டதாகவும் அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசுகையில், "வயநாட்டில் 115-204 மி.மீ மழை பெய்யும் என்று ஒன்றிய அரசின் வானிலை எச்சரிக்கை விடுத்தது. ஆனால் அடுத்த 48 மணி நேரத்தில் 572 மி.மீ மழை பதிவாகியுள்ளது. மேலும் நிலச்சரிவு ஏற்பட்ட அன்று ஆரஞ்சு எச்சரிக்கை மட்டுமே விடுக்கப்பட்டது. இந்த கோர சம்பவம் நிகழ்வும் முன் வரை அப்பகுதியில் ரெட் அலர்ட் விடுக்கப்படவில்லை.
நிலச்சரிவு ஏற்பட்ட பின்னரே, அன்று காலை 6 மணிக்கு, ரெட் அலர்ட் விடுத்தனர். ஜூலை 29 அன்று, இந்திய புவியியல் ஆய்வு மையம், ஜூலை-30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் சிறிய நிலச்சரிவு அல்லது பாறை வெடிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்று தெரிவித்தது. தே போன்று ஒன்றிய நீர் ஆணையமும் இந்தப் பகுதியில் உள்ள இரண்டு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்றும் தெரிவிக்கவில்லை.
பருவநிலை மாற்றம் தொடர்பான கடுமையான சிக்கல்கள் உள்ளன என்பதை ஒன்றிய அரசும் உணர வேண்டும். கடந்த காலங்களில், இப்போது நாம் பார்ப்பது போல் அதிக மழை பெய்ததை பார்த்திருக்கிறோமா? நமக்கு காலநிலை மாற்றத்தினை தணிக்கும் முயற்சிகள் தேவை. இது போன்ற ஏதாவது இயற்கை பேரிடர் நடந்தால், நீங்கள் மற்றவர்களின் மீது பழியை சுமத்த முயற்சிக்க கூடாது. நான் சொன்னது போல், இது பழி போடும் நேரம் இல்லை" என்றார்.
இதே போன்று கடந்த ஆண்டு (2023) தமிழ்நாட்டில் வெள்ளப்புயல் நேரத்தில் ஒன்றிய அரசின் வானிலை மையம் சரியாக எச்சரிக்கை விடுக்காமல், கவன குறைவாக இருந்ததே, சென்னை, தூத்துக்குடி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் வெள்ள பாதிப்புக்கு காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!