India

உள்நாட்டு விமானங்களில் தமிழில் அறிவிப்பு- 3 மாதத்துக்குள் முடிவெடுக்க வேண்டும் என ஒன்றிய அரசுக்கு உத்தரவு

இந்தியாவில் பல்வேறு மொழிகள் இருந்தாலும் ஒன்றிய அரசு தொடர்ந்து பிராந்திய மொழிகளை புறக்கணித்து ஒரு சாரார் பேசும் ஹிந்திக்கு மட்டுமே முக்கியத்தும் அளித்து வருகிறது. அரசின் பல்வேறு நிறுவனங்களும் இந்திக்கு முக்கியத்துவம் கொடுத்து வரும் நிலையில், தனியார் நிறுவனங்கள் சிலவும் அதே வேளையில் ஈடுபட்டு வருகிறது.

அதிலும் ஏராளமான விமான நிறுவனங்கள் தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களுக்கு செல்லும் விமானங்களில் கூட ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே அறிவிப்புகளை வெளியிடுகின்றன. இதற்கு பலமுறை எதிர்ப்பு தெரிவித்தும் விமான நிறுவனங்கள் அதனை மாற்றிக்கொள்ளாத நிலையே உள்ளது.

இந்த நிலையில், உள்நாட்டு விமானங்களில் தமிழில் அறிவிப்பு வெளியிடுவது குறித்து மூன்று மாத காலத்திற்குள் உரிய முடிவை எடுக்க வேண்டும் என ஒன்றிய சிவில் விமான போக்குவரத்து துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உள்நாட்டு விமானங்களில் தமிழில் அறிவிப்பு வழங்க ஒன்றிய விமான போக்குவரத்து துறைக்கு உத்தரவிடக் கோரி உலகத் தமிழ் ஆராய்ச்சி அறக்கட்டளை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி குமரேஷ் பாபு அமர்வில் விசாரணைக்கு வந்த போது, இலங்கை, மலேசியா, ஃபிரான்ஸ் போன்ற நாடுகளில் கூட, விமானங்களில் தமிழில் அறிவிப்புகள் வழங்கப்படும் நிலையில், இந்தியாவில் இயக்கப்படும் உள்நாட்டு விமானங்களில் தமிழில் அறிவிப்புகள் வழங்குவதில்லை என்று மனுதாரர் அறக்கட்டளை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கனகராஜ் வாதிட்டார்.

இந்த வாதத்தை கேட்ட நீதிபதிகள், உள்நாட்டு விமானங்களில் தமிழில் அறிவிப்புகள் வழங்க கோரி மனுதாரர் அறக்கட்டளை அளித்த விண்ணப்பத்தை 12 வாரங்களில் பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என, ஒன்றிய விமான போக்குவரத்து துறை அமைச்சகத்துக்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.

Also Read: பாரிஸ் ஒலிம்பிக் : இரண்டாவது பதக்கத்தை வென்றது இந்தியா : இரு பதக்கங்களை வென்று சாதனை படைத்த மனு பாக்கர் !