India

ரயில் விபத்து - ”மக்களின் உயிரோடு விளையாடும் ஒன்றிய அரசு” : பிரியங்கா காந்தி விமர்சனம்!

ஒன்றியத்தில் பா.ஜ.க ஆட்சிக்கு வந்ததில் இருந்தே ரயில் விபத்துகள் அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு மட்டும் 20 ரயில் விபத்துகள் நடந்துள்ளது. குறிப்பாக உத்தரப் பிரதேசம், குஜராத், ராஜஸ்தான், பீகார், ஒடிசா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் ரயில் விபத்துகள் நிகழ்ந்துள்ளது.

ரயில் விபத்துகளை தடுக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், ரயில்வே துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை இந்தியா கூட்டணி தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

ஆனால், ஒன்றிய அரசு பயணிகளின் உயிரோடு விளையாடி வருகிறது. தற்போது தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் கூட ரயில்வே துறை குறித்து ஒரு வார்த்தைக் கூட இடம் பெறவில்லை. ஒன்றிய அரசுக்கு மக்கள் உயிர்கள் பற்றி கவலையில்லை என்பது இதில் இருந்தே தெளிவாக தெரிகிறது.

இந்நிலையில் ஜார்க்கண்ட் மாநிலத்தின் செராய்கேலா மாவட்டத்தில் இன்று அதிகாலை மும்பை நோக்கிச் சென்ற மும்பை - ஹவுரா பயணிகள் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதனைத் தொடர்ந்து மக்களின் உயிர்களோடு ஒன்றிய அரசு விளையாடுகிறது என காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார்.

இது குறித்து மேலும் கூறிய அவர், ”ரயில்கள் சாமானியர்களின் போக்குவரத்தாக இருந்தது. ஆனால் இப்போது அவற்றில் சாமானியர்களுக்கு வசதியும் இல்லை, பாதுகாப்பும் இல்லை. கடந்த 2 வாரங்களில் ஆறுக்கும் மேற்பட்ட ரயில் விபத்துகள் நடந்திருக்கிறது. ரயில்வே அமைச்சரும் ஒன்றிய அரசும் இப்பிரச்சனையைக் கண்டு கொள்வதாக இல்லை. மக்களின் உயிர்களோடு விளையாடும் ஒன்றிய அரசின் போக்கு நிறுத்தப்பட வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

Also Read: இரு வாரங்களில் 7 இரயில் விபத்துகள்! : தொடரும் பா.ஜ.க அரசின் அலட்சியம்!