India

”அதானி - அம்பானி A1, A2” : நாடாளுமன்றத்தில் அனல் தெறிக்க பேசிய எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி!

2024- 25 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை ஜூலை 23 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இதையடுத்து நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.

இன்று மக்களவையில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி," மோடி ஆட்சியைக் கண்டு அனைத்து தரப்பு மக்களும் அச்சத்தில் இருக்கிறார்கள், ஏன் இந்த ஆட்சியில் ஒன்றிய அமைச்சர்களே ஒருவித அச்சத்தில் தான் உள்ளார்கள். பாஜக ஆட்சியில் பிரதமராக மோடி மட்டுமே அனைத்தையும் செய்கிறார். பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பிரதமராக விரும்பினால் அவர் பல பிரச்சனைகளை எதிர்க்கொள்ள நேரிடும்.

பாஜகவின் பிரச்சனை என்னவென்றால், பிரதமராக வேண்டுமென்ற கனவைக் காண அக்கட்சியில் ஒருவருக்கு மட்டும்தான் அனுமதி உண்டு. ஒருவேளை பாதுகாப்புத்துறை அமைச்சர் பிரதமராக விரும்பினால், பெரும் ஆபத்து வருமென்கிற அச்சம் இருக்கிறது. என்னுடைய கேள்வி ஒன்றுதான். பாஜகவில் இருக்கும் நண்பர்களும் அமைச்சர்களும் இந்தளவுக்கு பயப்பட என்ன காரணம்?.

மகாபாரத்தில் சக்கர வியூகம் நடந்தது. மோடி ஆட்சியில் தாமரை வியூகம் நடக்கிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் குருஷேத்ரா போரில் அபிமன்யுவை சக்கர வியூகம் அமைத்து கொன்றார்கள். அபிமன்யுவை கொன்ற 6 பேரை போலவே இப்போதும் ஒன்றிய அரசில் 6 பேர் தான் அனைத்தையும் கட்டுக்குள் வைத்திருக்கிறார்கள்

வருமானவரித்துறை, சிபி.ஐ., அமலாக்கத்துறை மூலம் எதிர்க்கட்சிகள் மிரட்டப்படுகின்றன. ஜி.எஸ்.டி வரி விதிப்பின் மூலம் பயங்கரவாதத்தை ஒன்றிய அரசு ஏவியுள்ளது. ஜி.எஸ்.டி-யால் சிறு, குறு தொழில்கள் அழிந்து வருகின்றன. ஆனால், பெரும் முதலாளிகளுக்கான பட்ஜெட்டை ஒன்றிய அரசு தாக்கல் செய்துள்ளது.

இந்தியாவின் வணிகமே இருவரை சார்ந்து தான் இருக்கிறது. அவர்களிடம் தான் விமான நிலையம், தொலைத்தொடர்பு, துறைமுகங்கள் என பல துறைகள் உள்ளன. அதில் ரயில்வேவும் விரைவில் இடம்பெறவுள்ளது.

நீங்கள் கட்டியமைத்திருக்கும் சக்கர வியூகம் கோடிக்கணக்கான மக்களுக்கு பாதிப்பை தந்து கொண்டிருக்கிறது. உங்களின் சக்கர வியூகத்தை நாங்கள் உடைப்போம். அதை செய்யத்தான், நீங்கள் பயந்து நடுங்கும், சாதி வாரி கணக்கெடுப்பு என்கிற ஆயுதத்தை கையில் எடுத்திருக்கிறோம்.

அக்னிவீர் இளைஞர்களின் ஓய்வூதியம் குறித்து ஒரு வார்த்தையும் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. அக்னிவீர் திட்டம் என்கிற பெயரில் ‘சக்கர வியூக’த்துக்குள் இந்திய இளைஞர்கள் சிக்க வைக்கப்பட்டுள்ளனர்.

வீர மரணமடைந்த அக்னிவீர் திட்ட ராணுவ வீரர் குடும்பத்திற்கு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்கியதாக கடந்த முறை கூறியது பொய்யான தகவல். காப்பீட்டுத் தொகை தான் வழங்கப்பட்டுள்ளது.

மோடி, அமித் ஷா, அஜித் தோவல், மோகன் பகவத், அதானி மற்றும் அம்பானி அமைத்த சக்கர வியூகத்தில் இந்தியா சிக்கியிருக்கிறது. அபிமன்யு கொல்லப்பட்டது போல், அவர்கள் நம் நாட்டை கொன்று கொண்டிருக்கிறார்கள்.

கை தட்டுவது, செல்போனில் டார்ச் அடிப்பதுதான் இளைஞர்களுக்கு நீங்கள் கொடுத்த வேலைவாய்ப்பா?, இளைஞர்களுக்கு இண்டெர்ன்ஷிப் திட்டம் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது மிகப்பெரிய காமெடி. இளைஞர்களின் கால்களை உடைத்துவிட்டு தற்போது பேண்டேஜ் போட முயல்கிறீர்கள்.

பட்ஜெட்டுக்கு முன் அல்வா தயாரிக்கும் நிகழ்வில் கூட பழங்குடியினர், ஒபிசி பிரிவினர், சிறுபான்மையினர் ஒருவரும் இல்லை" என தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், அதானி - அம்பானி பெயர்களை ராகுல் காந்தி குறிப்பிட்டபோது, சபாநாயகர் இடைமறித்ததார். பிறகு அதானி - அம்பானி என குறிப்பிடுவதற்கு பதில் A1, A2 என குறிப்பிட்டு ராகுல் காந்தி பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: ”பத்திரிகையாளர்களை முடக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு” : பத்திரிகையாளர் ரோஹிணி சிங் விமர்சனம்!