India
சமாஜ்வாதி முன்னாள் MLA கொலை வழக்கில் கைதான பாஜக முன்னாள் MLA விடுதலை... உ.பி ஆளுநர் உத்தரவால் அதிர்ச்சி!
உத்தர பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ., ஜவஹர் யாதவ் கொலை வழக்கில், கைதாகி சிறை தண்டனை பெற்ற பாஜக முன்னாள் எம்.எல்.ஏ., உதய்பன் கார்வாரியா நன்னடத்தை காரணமாக சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பலர் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 1996-ம் ஆண்டு உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜ் பகுதியில் உள்ள இரயில் நிலையத்துக்கு செல்லும்போது, சமாஜ்வாடி முன்னாள் எம்.எல்.ஏ., ஜவஹர் யாதவ், AK47 துப்பாக்கிகளால் சுடப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டார். இந்த கொலை சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கு தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இதையடுத்து இந்த வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டது. அப்போது இந்த வழக்கு தொடர்பாக ஒரு சிலர் கைது செய்யப்பட்ட நிலையில், இதில் முக்கிய புள்ளியாக செயல்பட்ட பாஜக முன்னாள் எம்.எல்.ஏ., உதய்பன் கார்வாரியாவும் கைது செய்யப்பட்டார். உதய்பன் உள்பட 3 கார்வாரியா சகோதரர்கள் கடந்த 2015-ம் ஆண்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதையடுத்து 2018-ம் ஆண்டு அம்மாநில பாஜக அரசு அவருக்கு விடுதலை கொடுக்க முனைப்பாக முயன்று வந்த நிலையில், அதற்கும் நீதிமன்றம் தடை விதித்தது. இதைத்தொடர்ந்து இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், அவருக்கு கடந்த 2019-ம் ஆண்டு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
2015-ல் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து வந்த அவர், தற்போது அம்மாநில ஆளுநர் ஆனந்திபென் படேல் உத்தரவின் பேரில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். ஆளுநருக்கு இருக்கும் அதிகாரத்தை பயன்படுத்தி, சிறையில் நல்லவிதமாக நடந்துகொண்டதாக கொலை குற்றவாளியான பாஜக முன்னாள் எம்.எல்.ஏ., உதய்பன் கார்வாரியா, கடந்த ஜூலை 25-ம் தேதி சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
உதய்பன் கார்வாரியா விடுதலை செய்யப்பட்டதற்கு, பாதிக்கப்பட்ட ஜவஹர் யாதவின் மனைவி விஜ்மா யாதவ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் பட்டப்பகலில் அதிநவீன ஆயுதங்களால் தனது கணவரைக் கொன்ற வழக்கில் உதய்பானுக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகவும், உதய்பன் மட்டுமின்றி அவரது குடும்பமும் பல தலைமுறைகளாக குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருவதாக குற்றம்சாட்டிய அவர், இப்படிப்பட்டவரின் நடத்தை எப்படி நல்ல நடத்தையாக இருக்க முடியும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதோடு உதய்பன் விடுதலை குறித்து வழக்கு தொடரப்படும் என்றும் தெரிவித்துள்ளார். விஜ்மா யாதவ் தற்போது உ.பியின் பிரதாபுர் தொகுதியில் எம்.எல்.ஏ-வாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
ஒரு நாள் தாமதம் கூட, அடிப்படை உரிமைக்கு எதிரானது தான்! : பிணை வழக்குகள் குறித்து உச்சநீதிமன்றம் கருத்து!
-
பா.ஜ.க நிர்வாகி வீட்டில் CBCID போலிஸார் திடீர் சோதனை : சிக்கிய முக்கிய ஆவணங்கள்?
-
கோவிட் முறைகேடு புகார்! : பா.ஜ.க முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீது வழக்குத் தொடர பரிந்துரை!
-
மணிப்பூரில் மீண்டும் வன்முறை : 17 வீடுகளுக்கு தீ வைப்பு - பாலியல் வன்கொடுமை செய்து பெண் படுகொலை!
-
சென்னை ரிப்பன் மாளிகையை பார்வையிட விண்ணப்பிக்கலாம்! : சென்னை மாநகராட்சி அறிவிப்பு!