India

கல்லூரி மாணவர்களே குறி... சிக்கிய பாஜக தலைவரின் மகன்... ரூ.10 லட்சம் மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல் !

போதைப்பொருள் விற்பனையில் பாஜக ஆளும் குஜராத்தான் டாப் 1-ல் உள்ளது. குஜராத்தில் தினந்தோறும் போதைப்பொருள் கடத்தல் விவகாரமாக யாராவது கைது செய்யப்பட்டு வருகிறார்கள். இந்த கைது விவகாரத்தில் முக்கிய பங்கு வகிப்பது பாஜக பிரமுகர் அல்லது பாஜக பின்புலம் உடையவர்கள்தான். இந்த சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், தற்போது ரூ.35 லட்சம் மதிப்பிலான போதைப்பொருள் கடத்திய வழக்கில் மேலும் ஒரு பாஜக நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார்.

குஜராத்தின் ராஜ்கோட் பகுதியில் கடந்த ஜூலை 22-ம் தேதி மேற்கொண்ட சோதனையில் ரூ.35.49 லட்சம் மதிப்பிலான போதைப்பொருள் கடத்தி விற்றுவந்த பாஜக முக்கிய பிரமுகர் விகாஸ் அஹிர் உள்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். விகாஸ் அஹிர் பல்வேறு குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளது விசாரணையில் தெரியவந்தது.

மேலும் அவர் யோகி ஆதித்யநாத், தேஜஸ்வி சூர்யா, பாஜக அமைச்சர்கள் என பாஜகவை சேர்ந்த முக்கிய தலைவர்களுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் பலர் மத்தியிலும் பல்வேறு கருத்துகளை பெற்று வரும் நிலையில், மேலும் ஒரு பாஜக தலைவரின் மகன் போதைப்பொருள் விற்றதாக கைது செய்யப்பட்டுள்ளார்.

குஜராத்தின் அகமதாபாத் நகரில் உள்ள பிளாட் ஒன்றில் போதைப்பொருள் விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு கடந்த ஜூலை 24-ம் தேதி தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில் விரைந்து வந்த அவர்கள், சோதனை செய்தபோது அங்கு பிளாட் 19-ல் பார்த் மக்வானா (21), அவரது நண்பர் நவாப் சோதா (24) ஆகிய இரண்டு இளைஞர்கள் கையும் களவுமாக சிக்கினர்.

அதில் பார்த் மக்வானா, பாஜக தலித் அமைப்பின் முக்கிய பொறுப்பில் இருக்கும் தேவ்குபாய் என்பவரது மகன் ஆவார். கல்லூரி படித்து வரும் பார்த் மக்வானா, நவாப் சோதா கடந்த 5 மாதங்களுக்கு முன்பு இருந்து போதைப்பொருள் விற்று வந்துள்ளனர். அவர்கள் இருவரும் ஜிம்முக்கு செல்வதால், அவர்கள் அங்கிருப்பவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கே போதைப்பொருளை விற்று வந்துள்ளனர்.

தற்போது கைது செய்யப்பட்டிருக்கும் அந்த இளைஞர்களிடம் இருந்து போலீசார் எடை போடும் இயந்திரம், மொபைல் போன்கள், ரூ.10 லட்சம் மதிப்பிலான போதைப்பொருள்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பாஜகவின் தலித் அமைப்பின் முக்கிய பொறுப்பில் இருப்பவரின் மகன், போதைப்பொருள் விற்று வந்த சம்பவம் கண்டனங்களை எழுப்பி வருகிறது.

Also Read: ரூ.35 லட்சம் மதிப்பிலான போதைப் பொருள் கடத்திய பாஜக பிரமுகர்... இணையத்தில் வைரலாகும் படங்கள்!