India

இந்த பட்ஜெட்டால் நாட்டில் எப்படி சமமான வளர்ச்சி இருக்கும்?: மல்லிகார்ஜூன கார்கே கேள்வி!

2024- 25 ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை நேற்று நாடாளுமன்றத்தில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இதில் நிதிஷ் குமார், சந்திரபாபு நாயுடு ஆகியோருடன் கூட்டணியை தக்கவைத்துக் கொள்வதற்காகவே பீகார், ஆந்திரா மாநிலங்களுக்கு கூடுதல் நிதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதேநேரம் இந்தயா கூட்டணி ஆட்சியில் இருக்கும் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஜூலை 27 ஆம் தேதி பிரதமரின் தலைமையில் நடைபெற இருக்கும் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இந்நிலையில் ஒன்றிய பட்ஜெட்டை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி எம்.பிக்கள் அவை தொடங்குவதற்கு முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவை தொடங்கிய உடன் ஒன்றிய அரசை எதிர்த்து முழக்கங்களை எழுப்பினர்.

மாநிலங்களவையில் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ”பட்ஜெட்டில் ஒரு மாநிலத்துக்கு இனிப்பும், ஒரு மாநிலத்திற்கு பக்கோடாவும் வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, சட்டீஸ்கர் உள்ளிட்ட பல மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு இல்லை.அனைத்து மாநிலங்களுக்கும் சமநிலை நிதி ஒதுக்கீடு இல்லாமல் எப்படி நாட்டில் வளர்ச்சி ஏற்படும்?. ஒன்றிய அரசன் இந்த போக்கை கண்டித்து நாங்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்கிறோம்.” என கூறினார்.

இதையடுத்து மாநிலங்களவையில் இருந்து இந்தியா கூட்டணி எம்.பிக்கள் வெளிநடப்பு செய்தனர். அதேபோல் மக்களவையில் இருந்தும் ஒன்றிய பட்ஜெட்டை கண்டித்து இந்தியா கூட்டணி எம்.பிக்கள் வெளிநடப்பு செய்தனர்.

Also Read: ”நாட்டின் பட்ஜெட் அல்ல இது கூட்டணி பட்ஜெட்" : NDA அரசுக்கு திருச்சி சிவா கண்டனம்!