India
புதுவை ரியல் எஸ்டேட் தரகரிடம் மாமூல் கேட்டு மிரட்டல்... பாஜக பெண் பிரமுகருக்கு போலீசார் வலைவீச்சு !
புதுச்சேரி உழவர்கரையை சேர்ந்தவர் ரியல் எஸ்டேட் தரகர் விமல். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் கொலை செய்யப்பட்ட ரவுடி தெஸ்தனின் மைத்துனர் ஆவார். இவரிடம் ஒரு பெண் உட்பட மூன்று பேர் செல்ஃபோன் மூலமாக தொடர்பு கொண்டு ரூ. 5 லட்சம் பணம் மாமூலாக கேட்டுள்ளனர். இதில் அதிர்ச்சி அடைந்த அவர், இது குறித்து ரெட்டியார்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது விமலிடம் பேசியது பிரபல தாதா மர்டர் மணிகண்டனின் மனைவியும் பாஜக சட்டமன்ற உறுப்பினர் கல்யான சுந்தரத்தின் தீவிர ஆதரவாளரான பத்மாவதி மற்றும் மணிகண்டனின் கூட்டாளிகளான விக்கி, ரஞ்சித், பிரகாஷ்குமார், ஜெரால்ட் என தெரியவந்தது.
இதையடுத்து அவர்களை போலீசார் தேடி வந்த நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்னர் இரவு விமல் வீட்டருகே நின்று கொண்டிருந்த விக்கி உள்ளிட்ட 4 பேரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். இதில் விக்கி அங்கிருந்து தப்பியோடிய நிலையில், பிடிப்பட்ட மூன்று பேரை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்த போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது இவர்கள் பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு தண்டனை கைதியான தாதா மர்டர் மணிகண்டன் செல்ஃபோன் மூலமாக, அவரது மனைவி பத்மாவதி ரியல் எஸ்டேட் தரகர் விமலிடம் மிரட்டி பணம் கேட்குமாறு விக்கியிடம் கூறியுள்ளார். இதையடுத்து விக்கி, தனது கூட்டாளிகளான ரஞ்சித், பிரகாஷ்குமார், ஜெரால்ட் ஆகியோரை தொடர்பு கொண்டு இதனை கூறியுள்ளார்.
இதனால் அவர்கள் ரியல் எஸ்டேட் தரகர் விமலை தொடர்பு கொண்டு லட்சக்கணக்கில் பணம் கேட்டு மிரட்டியுள்ளது கண்டறியப்பட்டது. தொடர்ந்து அவர்களிடம் இருந்த ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்த போலீசார், அது குறித்து விசாரித்தபோது, அதுவும் ஒரு தொழிலதிபரிடம் மிரட்டி வாங்கிய பணம் என தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து அவர்களிடம் இருந்து பணம், 3 செல்ஃபோன்கள், ஒரு இருசக்கர வாகனம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்த போலீசார், அவர்களை நீதிபதி மூன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தொடர்ந்து இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள பாஜக பிரமுகரும் தாதாவின் மனைவியுமான பத்மாவதி மற்றும் தப்பியோடிய விக்கி ஆகிய இருவரையும் தேடி வருகின்றனர். மேலும் தாதா மணிகண்டனை சிறையில் இருந்து காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!