India

”விசாரணைக்கு உகந்ததல்ல” : மில்கிஸ் பானு குற்றவாளிகள் ஜாமீன் மனுவை நிராகரித்தது உச்ச நீதிமன்றம்!

2002-ம் ஆண்டில் குஜராத் மாநிலம் கோத்ரா இரயில் எரிப்புச் சம்பவத்துக்குப் பின் குஜராத்தில் பெரும் வன்முறை ஏற்பட்டது. இந்த வன்முறையின்போது 5 மாத கர்ப்பிணியான பில்கிஸ் பானு என்ற பெண்ணை இந்துத்துவ கும்பல் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தது. மேலும் அவரது குடும்பத்தாரையும், அவரது 2 வயது மகன்களையும் கொடூரமாக கொன்றது.

இந்த சம்பவம் இந்தியாவையே உலுக்கிய நிலையில், இதில் தொடர்புடைய 11 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். பிறகு கடந்த 2008-ம் ஆண்டு குற்றம் சாட்டப்பட்ட 11 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கில் குற்றவாளிகளான 11 பேரையும், குஜராத் பா.ஜ.க அரசு 2022-ம் ஆண்டு சுதந்திர தினத்தன்று விடுதலை செய்ததது.

இதனை எதிர்த்து பில்கிஸ் பானு மற்றும் வேறு சிலர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில், " பில்கிஸ் பானு வழக்கின் விசாரணை மகாராஷ்டிரா மாநிலத்துக்கு மாற்றப்பட்டதால் 11 குற்றவாளிகளை விடுவிப்பதற்கான அதிகாரம் குஜராத் அரசுக்கு கிடையாது.பல உண்மைகளை மறைத்து மோசடி மூலம் நீதிமன்றத்தில் விடுதலை செய்வதற்கான உத்தரவுகள் பெறப்பட்டுள்ளது.

பாலியல் வன்கொடுமை குற்றவாளிகள் 11 பேரை விடுவிப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்று பிறப்பிக்கப்பட்ட உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. அவர்கள் மீண்டும் சிறைக்கு செல்லவேண்டும்" என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

இந்த உத்தரவை அடுத்து 11 பேரும் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் இந்த வழக்கின் குற்றவாளிகள் 2 பேர் ஜாமீன் வழங்க கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு இன்று நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, சஞ்சய் குமார் அமர்வு மனு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் இந்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல என்று கூறிய மனுவை தள்ளுபடி செய்தது.

Also Read: ”பயணிகளின் பாதுகாப்பில் அலட்சியமாக செயல்படும் பா.ஜ.க அரசு” : முதலமைச்சர் மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு!