India

நீட் முறைகேடு தொடர்பான வழக்கு : உச்சநீதிமன்றத்தின் உத்தரவு என்ன? - விபரம் !

நடப்பு ஆண்டில் நடைபெற்ற இளநிலை (UG) படிப்புகளுக்கான நீட் தேர்வில் இதுவரை இல்லாத அளவில் ஆள் மாறாட்டம், தேர்வு வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண் என பல வழிகளில் மோசடி நடந்துள்ளது. இவையனைத்தும் பாஜக மற்றும் அதன் கூட்டணி ஆளும் மாநிலங்களான ராஜஸ்தான், மகாராஷ்டிரா, பீஹார் உள்ளிட்ட மாநிலங்களில் நடந்துள்ளது.

இந்த வழக்கில் இதுவரை மாணவர்கள், பெற்றோர்கள், அரசு அலுவலர்கள் என பலரும் சிக்கி கைது செய்யப்பட்டுள்ளனர். நாள்தோறும் நடைபெறும் விசாரணையில் திடுக் தகவல்கள் வெளியாகி வந்த வண்ணமாக இருக்கிறது. இந்த நிகழ்வு நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி பலரும் வலியுறுத்தி வந்த போதிலும், ரத்து செய்யப்படாது என்று ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

இந்த விவகாரம் பூதகரமாகியுள்ள நிலையில், நீட் முதுநிலை (PG) தேர்வு நடைபெறுவதற்கு வெறும் 12 மணி நேரத்துக்கு முன்பாக தேர்வு ரத்து செய்யப்படுவதாக ஒன்றிய அரசு அறிவித்தது பலர் மத்தியிலும் கண்டனங்களை எழுப்பியது. இப்படி தொடர்ந்து அடுத்தடுத்து என நீட் தேர்வில் மட்டுமே பல்வேறு குளறுபடிகள் அரங்கேறியுள்ள நிலையில், இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்குகளும் தொடரப்பட்டது.

இந்த சூழலில் விடுமுறை காலம் முடிந்து இன்று (ஜூலை 8) நீதிமன்றத்தில் நீட் தொடர்பான 36 வழக்குகள் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் கேள்வித்தாள் கசிவு குறித்து குறித்த முழு விசாரணை விபரங்களை சிபிஐ விரிவாக தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறி, வழக்கை வரும் 11-ம் தேதி ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.

=> நீட் வழக்கில் உச்சநீதிமன்றம் விரிவான உத்தரவு :

1. வினாத்தாள் கசிவு குறித்த முழு விசாரணை விபரங்களை சிபிஐ விரிவாக தாக்கல் செய்ய வேண்டும்.

2. முதல் வினாத்தாள் கசிவு எப்போது ஏற்பட்டது? என்பது உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் தாக்கல் செய்ய வேண்டும்.

3. வினாத்தாள் தயாரிப்பு முதல் தேர்வு மையங்களுக்கு வினாத்தாள் அனுப்பப்பட்டது வரையிலான விவரங்களை தேதி வாரியாக தேசிய தேர்வு முகமை (NTA) தாக்கல் செய்ய வேண்டும்.

4. வினாத்தாள் கசிவு மூலம் பலனடைந்த மாணவர்கள் எத்தனை பேர்? அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என்கிற விபரங்களை NTA தாக்கல் செய்ய வேண்டும்.

5. சைபர் தடைய அறிவியல் துறை அல்லது வேறு அமைப்பு மூலம் எத்தனை மாணவர்கள் மோசடியில் ஈடுபட்டுள்ளார்கள்? என்பதை கண்டறிய வேண்டும்.

6. பல் தொழில்நுட்ப நிபுணர்கள் கொண்ட குழு அமைத்து, நீட் தேர்வு மோசடிகள் நடைபெறாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒன்றிய அரசுக்கு உத்தரவு.

- மேற்கண்ட அனைத்து விபரங்களையும் 10-ம் தேதி மாலை 5 மணிக்குள் அனைவரும் பதிலளிக்க வேண்டும் என்று கூறி வழக்கு விசாரணையை 11-ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்து தீர்ப்பளித்துள்ளது.

Also Read: தப்பித்து ஓடுவதில் ஈடு இணையற்ற NDA நிர்வாகிகள் : பெண்களுக்கு நேரும் அநீதி!